நெல் ஊக்கத்தொகை குறித்த கடிதம் கட்டாய உத்தரவு அல்ல: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
நெல்லுக்கான ஊக்கத்தொகை விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சகத்தின் கடிதம் ஓர் ஆலோசனையே தவிர, அது ஒரு கட்டாய உத்தரவு அல்ல என்பது குறித்து...
நெல்லுக்கான ஊக்கத்தொகை விவகாரத்தில் மாநிலங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் வழங்கிய கடிதம் ஓர் ஆலோசனையே தவிர, அது ஒரு கட்டாய உத்தரவு அல்ல என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினத்துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூா் திலகா் திடலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அண்மையில் ஒரு கடிதம் அனுப்பியது. அதில், தமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய ஊக்கத்தொகையால் நெல் உற்பத்தி பெருகி வருவதாகவும், அதன் காரணமாக பல்வேறு பிரச்னைகள் உருவாகி வருவதாகவும், அதனால் தமிழ்நாடு அரசு நெல்லுக்கு வழங்கி வரும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொத்தத்தில் நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக் கூடாது என அறிவுறுத்தி மத்திய அரசு நமக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதுவும் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா் என மூச்சுக்குமூச்சு சொல்கிற நிா்மலா சீதாராமனின் நிதிஅமைச்சகம் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கிறது என பேசியிருந்தார்.
இதற்கு நெல்லுக்கான ஊக்கத்தொகை விவகாரத்தில் மாநிலங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் வழங்கிய கடிதம் ஓர் ஆலோசனை தவிர, அது ஒரு கட்டாய உத்தரவு அல்ல என்று மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினத்துறையின் செயலாளர் பதிலளித்துள்ளார்.
Advertisement
அவர் அளித்துள்ள பதிலில், ஊட்டச்சத்து பாதுகாப்பு, சுயசார்பு மற்றும் நிலையான விவசாயம் ஆகிய தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப, மாநிலங்களின் ஊக்கத்தொகைக் கொள்கைகளை பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அமைக்குமாறு செலவினத் துறைச் செயலாளர், மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு ஜன.9 இல் எழுதியிருந்த கடிதம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ஓர் ஆலோசனையே தவிர, அது ஒரு கட்டாய உத்தரவு அல்ல.
மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட இந்தத் தகவல், இந்தியாவின் நீண்டகால உணவு மற்றும் பயிர் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் நேர்மறையான அணுகுமுறையாகும்:
விவசாயிகளை ஆதரிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) அறிவிக்கிறது. இருப்பினும், பல மாநிலங்களில், குறிப்பாக வட இந்தியாவில், சாகுபடி என்பது கோதுமை மற்றும் நெல் பயிரை நோக்கியே அதிகமாக உள்ளது. மாநில அரசுகள் இந்தப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் கூடுதல் ஊக்கத்தொகை அறிவிக்கும்போது, அது அவற்றின் சாகுபடியையே மீண்டும் மீண்டும் ஊக்குவிக்கிறது. இதனால் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்கள் பயிரிடும் பரப்பளவு குறைகிறது. மேலும், நீர் மற்றும் உரங்கள் அதிகம் தேவைப்படும் இத்தகைய விவசாய முறையினால் சுற்றுச்சூழல் அழுத்தமும், அத்தியாவசியப் பயிர்களான பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வித்துக்களுக்காக இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
எனவே, தேச நலன் கருதி பயிர் பல்வகைப்படுத்துதலை ஊக்குவிப்பதன் மூலம் மத்திய அரசு ஒரு பொறுப்பான மற்றும் தொலைநோக்குப் பார்வையிலான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. வட இந்தியாவின் சில பகுதிகளில் கோதுமை மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில் நெல் ஆகியவற்றை மட்டுமே பயிரிடும் ஒற்றைப்பயிர் சாகுபடியைத் தவிர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். விவசாயிகளின் நலன்களையும் தேசிய உணவுப் பாதுகாப்புத் தேவைகளையும் பாதுகாக்கும் நிலையான விவசாய நடைமுறைகளை நோக்கிச் செயல்பட மாநிலங்களை ஊக்குவிப்பதே இதன் இலக்காகும்.
பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்துவது வெறும் பொருளாதாரக் காரணங்களுக்காக மட்டுமல்ல, விவசாயிகளின் நலனுக்காகவும் அவசியமானது. உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பது, சர்வதேசச் சூழல், வழங்கல் சங்கிலி தடைகள் மற்றும் விலையேற்ற பாதிப்புகளுக்கு உள்ளாகும் இறக்குமதியைக் குறைக்க உதவும். அதேசமயம், இது ஊட்டச்சத்து பாதுகாப்பை வலுப்படுத்தி, நாட்டில் சமநிலையான மற்றும் தாங்குசக்தி மிக்க பயிர் அமைப்பை மேம்படுத்தவும் துணைபுரியும்.
இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களும் விவசாயிகளும் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களைப் பயிரிடுவதில் நீண்ட மற்றும் செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர். அந்த வலிமையைப் பயன்படுத்துவதே இந்தக் கடிதத்தின் நோக்கம்.
முக்கிய உணவுப் பயிர்களில் சுயசார்பு அடைவது அவசியமான இந்தக் காலகட்டத்தில், பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் இந்தியாவைத் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற மாநிலங்களும் மத்திய அரசும் இணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு ஏற்கனவே பல உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் பருப்பு வகைகளுக்கான சுயசார்பு இயக்கம், சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கான தேசிய இயக்கம் மற்றும் சமையல் எண்ணெய் – எண்ணெய் பனைக்கான தேசிய இயக்கம்ஆகியவை அடங்கும்.
விவசாயிகள் குறிப்பிட்ட சில பயிர்களை மட்டுமே பயிரிடுவதைத் தவிர்த்து மற்ற பயிர்களுக்கு மாற ஊக்குவிக்கும் வகையில், பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. 2025-26 பொருளாதார ஆய்வறிக்கையின்படி, சமையல் எண்ணெய் இறக்குமதிச் சார்பு 2015-16 இல் 63.2% ஆக இருந்தது, 2023-24 இல் 56.25% ஆகக் குறைந்துள்ளது. இது சரியான திசையில் நாம் செல்வதைக் காட்டுகிறது. மேலும், 2014-15 முதல் 2024-25 வரையிலான காலத்தில் எண்ணெய் வித்துக்களின் சாகுபடி பரப்பளவு 18 சதவீதத்திற்கும் மேலாக, உற்பத்தி சுமார் 55 சதவீதமாகவும், உற்பத்தித்திறன் சுமார் 31 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
இந்திய அரசு விவசாயிகளின் நலனுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு தலா 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. 1.75 கோடிக்கும் அதிகமான மண் வள அட்டைகள் மற்றும் 8,270-க்கும் மேற்பட்ட பரிசோதனைக்கூடங்கள் அறிவியல் ரீதியான விவசாயத்தை உறுதி செய்கின்றன. பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா எனப்படும் பயிர் காப்பீட்டு திட்டம் 4 கோடி விவசாயிகளை மோசமான வானிலை அபாயங்களிலிருந்து பாதுகாக்கிறது. ‘பிரதமர் தன்-தான்ய கிருஷி யோஜனா’ திட்டத்தின் மூலம் பின்தங்கிய 100 விவசாய மாவட்டங்களில் உற்பத்தித்திறன் மேம்பாடு, பயிர் பல்வகைப்படுத்துதல், அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பு வசதிகள், பாசன மேம்பாடு மற்றும் வேளாண் கடன் வசதி ஆகியவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நேரடியாக 1.7 கோடி விவசாயிகள் பயனடைகின்றனர். 2014-ல் வெறும் 2 ஆக இருந்த மெகா உணவுப் பூங்காக்களின் எண்ணிக்கை 2025-ல் 41 ஆக உயர்ந்துள்ளது — இதில் 24 செயல்பாட்டிலும், 17 அமலாக்க நிலையிலும் உள்ளன - இது அறுவடைக்குப் பிந்தைய மற்றும் பதப்படுத்தும் உள்கட்டமைப்பை வலுப்படுத்துகிறது.
ஆராய்ச்சி, மேம்படுத்தப்பட்ட விதைகள் விநியோகம், குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையிலான கொள்முதல் ஆதரவு, பதப்படுத்தும் உள்கட்டமைப்பு மற்றும் மதிப்புச் சங்கிலி மேம்பாடு என அனைத்தையும் ஒருங்கிணைத்து விவசாயிகளின் லாபத்தை உறுதி செய்வதே மத்திய அரசின் அணுகுமுறை ஆகும். பயிர் பல்வகைப்படுத்துதல் மூலம் விவசாயிகளின் லாபம் மேலும் அதிகரிக்கும்.
மாநிலங்கள் தங்களது விவசாயக் கொள்கைகளை விரிவான தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்தக் கடிதம் எழுதப்பட்டது. இத்தகைய இலக்குகளுடன் இணைந்து செயல்படுவது மாநிலங்களுக்கு ஒரு சுமை அல்ல; அது விவசாயிகள், நுகர்வோர் மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் நன்மை பயக்கும் ஒரு கூட்டுப் பொறுப்பாகும்.
இதை ஒரு திணிப்பாக சித்தரிக்க முயல்வதோ அல்லது அதன் நோக்கத்தைத் திட்டமிட்டுத் தவறாகப் புரிந்துகொள்வதோ உண்மைகளைத் திரித்துக் கூறுவது என கூறியுள்ளார்.