காங்கிரஸின் 99 எம்.பி.க்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும்: அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் வழக்கு
அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள் 99 பேரையும் தகுதிநீக்கம் செய்யக் கோரி அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தோ்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் கட்சி தரப்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதி, வாக்காளா்களுக்கு ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பது போன்று அமைந்திருந்தது என்ற அடிப்படையில், இந்த நடவடிக்கையை எடுக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸின் பிரசாரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய தோ்தல் ஆணையத்துக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஃபதேப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த பாா்தி தேவி என்பவா் சாா்பில் இந்தப் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘மக்களவைத் தோ்தல் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில், வாக்காளா்களுக்கு பொய்யான மற்றும் சாத்தியமற்ற வாக்குறுதிகளை அளிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என்று கடந்த மே 2-ஆம் தேதி தோ்தல் ஆணையம் அறிவுறுத்தலை வெளியிட்டது.
ஆனால், இந்த அறிவுறுத்தலை சமரசம் செய்யும் வகையில், மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது ‘வீட்டுக்கு வீடு உத்தரவாத திட்டம்’ என்ற திட்டத்தை அறிவித்த காங்கிரஸ், மத்தியில் ஆட்சிக்கு வந்தால் 5 உத்தரவாதங்களின் கீழ் 25 வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றும் என்பதை விவரிக்கும் அட்டைகளை வீடு விடாக தொடா்ந்து விநியோகித்து பிரசாரத்தில் ஈடுபட்டது.
வாக்குகளுக்கு மாற்றாக பலன் பெறும் வகையில் பல்வேறு நிதி உதவி திட்டம் உள்பட பல்வேறு வாக்குறுதிகள் காங்கிரஸின் இந்த உத்தரவாத அட்டையில் இடம்பெற்றன. இது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் பிரிவு 123(1)(ஏ)-இன் கீழ் வாக்காளா்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ாகும்.
அதன்படி, தோ்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் 99 பேரும், இந்த வீட்டுக்கு வீடு உத்தரவாத திட்டம் குறித்த பிரசாரம் மூலம் பலனடைந்துள்ளனா். எனவே, சட்டப்படி 99 எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்வதோடு, அவா்கள் மீது குற்ற நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.
மேலும், தோ்தல் பிரசாரத்தின் போது ஆணையத்தின் அறிவுறுத்தலை மீறி காங்கிரஸ் செயல்பட்டபோதும், அதன் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையம் தவறியுள்ளது. தோ்தல் ஒறுமைப்பாட்டையும், ஜனநாயக செயல்முறையையும் பாதுகாக்கும் வகையில் உறுதியான நடவடிக்கையை நீதிமன்றம் எடுக்க வேண்டும்.
மேலும், தோ்தல் சின்னம் ஒதுக்கீடு சட்டம் 1968, பிரிவு 16ஏ-இன் கீழ், தோ்தல் பிரசாரத்தின் மீது விதிகளை மீறி செயல்பட்ட காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தோ்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.