கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கைதாகியிருக்கும் கொலையாளி என சந்தேகிக்கப்படுபவர், குற்றத்தை இழைத்த பிறகு, வழக்கம் போல தூங்கி எழுந்து ஆடைகளை அலசியிருப்பது தெரிய வந்துள்ளது.
மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்திருக்கும் நிலையில், பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பிறகு, எந்த சலனமும் இல்லாமல், அவரது இருப்பிடத்துக்கு வந்து உறங்கியிருப்பதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. அவர் வெள்ளிக்கிழமை காலை வரை உறங்கியிருப்பதும், பிறகு எழுந்து தனது துணிகளை எல்லாம் துவைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் நடத்திய தேடுதல் பணியின்போது, குற்றவாளி தங்கியிருந்த அறையில், ஷூவில் ரத்தக் கறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இரவு மருத்துவமனையில் பணியில் இருந்தவர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்களையும் காவல்துறையினர் ஆராய்ந்துள்ளனர்.
மற்றொரு காவலர் இதுபற்றி கூறுகையில், சம்பவம் நடந்த இடத்திலிருந்து கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தால், பெண் மருத்துவர் முதலில் கொலை செய்யப்பட்டு பிறகு பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.
கருத்தரங்கு அறையில் இருந்து ரத்தக் கறைகள் உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டு, குற்றவாளி இல்லாமல், குற்றம் எவ்வாறு நடந்திருக்கலாம் என்று காவலர்கள் சம்பவத்தை நடத்திப் பார்த்திருக்கிறார்கள்.
இவர் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர் அல்ல என்றும், அவர் தன்னார்வலராக பணியாற்றி, மருத்துவமனையை அடிப்படையாக வைத்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதும், இவர் அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து செல்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை காலை, பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சனிக்கிழமை, இந்த நபர் கைதாகியிருக்கிறார். உடல்கூறாய்வு முடிவுக்காக காவல்துறையினர் காத்திருக்கிறார்கள். அதில், வேறு சிலருக்கும் இந்த குற்றச்செயலில் தொடர்பிருக்கலாமா என்பது உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், வியாழக்கிழமை இரவுப் பணிக்கு வந்த பெண் மருத்துவர், வெள்ளிக்கிழமை காலை கருத்தரங்கு அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது.
மருத்துவமனைகளில் போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறி மாநிலம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறது மம்தா அரசு என்று பாஜகவினர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், சனிக்கிழமை இது குறித்துப் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில், இளநிலை மருத்துவர்கள் வைக்கும் கோரிக்கைக்கு நான் முழு ஆதரவு தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.