இந்தியாவில் விற்பனையாகும் உப்பு, சர்க்கரை பிராண்டுகள் அனைத்திலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளதாக இன்று வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்ஸிக்ஸ் லிங்க் என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்பு ’உப்பு மற்றும் சர்க்கரையில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள்’ என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில் சாதாரண உப்பு, கல் உப்பு போன்ற 10 வகையான உப்புக்களும், இணையம் மற்றும் கடைகளில் விற்பனையாகும் 5 வகையான சர்க்கரைகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வில் உப்பு மற்றும் சர்க்கரை மாதிரிகளில் ஃபைபர், துகள்கள், ஃபிலிம்கள், சிறிய துண்டுகள் என 0.1 மி.மீ முதல் 0.5 மி.மீ அளவு வரை பல்வேறு வடிவங்களில் பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாகப் பேசிய டாக்ஸிக்ஸ் லிங்க் நிறுவனர் ரவி அகர்வால், “எங்கள் ஆய்வின் நோக்கம் மைக்ரோபிளாஸ்டிக் குறித்து இதுவரையிலான அறிவியல் தரவுத் தொகுப்பில் பங்களிக்கவும், உலகளாவிய பிளாஸ்டிக் குறித்த பிரச்னைகளைத் தெளிவாகவும் துல்லியமாகவும் அணுக உதவுவதும் ஆகும்
இந்த பிரச்னைத் தொடர்பான நடவடிக்கைகளைத் தூண்டி, மைக்ரோபிளாஸ்டிக் ஏற்படுத்தும் ஆபத்துகளைக் குறைக்கக்கூடிய தொழில்நுட்பம் தொடர்பாக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.
இந்த ஆய்வில், உப்பு மாதிரிகளில் 1 கிலோவுக்கு 6.71 முதல் 89.15 துகள்கள் வரை நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
அயோடின் உப்பில் அதிகபட்சமாக 89.15 துகள்களும், இயற்கையான கல் உப்பில் குறைவாக 6.70 துகள்களும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல, சர்க்கரை மாதிரிகளில் ஒரு கிலோவில் 11.85 முதல் 68.25 வரை நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாகவும், இயற்கை முறையில் தயாராகாத சர்க்கரையில் அதிகளவில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
உலகளவில் அதிகரித்து வரும் மைக்ரோபிளாஸ்டிக் தொடர்பான பிரச்னைகள் ஆரோக்கியத்தையும், சுற்றுச்சூழலையும் பாதித்து வருகின்றன. இந்த சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உணவு, நீர் மற்றும் காற்று மூலம் மனித உடலுக்குள் நுழைந்து உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கின்றன.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த வகையான பிளாஸ்டிக் துகள்கள் மனித உடலின் நுரையீரல், இதயம், தாய்ப்பால் மற்றும் தாய் வயிற்றில் உள்ள குழந்தையின் உடலில் முதற்கொண்டு இருப்பதாகக் கூறபட்டிருந்தது.
முந்தைய ஆய்வுகளின்படி, சராசரியாக ஒரு இந்தியர் தினமும் 10.98 கிராம் உப்பு மற்றும் 10 தேக்கரண்டி அளவிலான சர்க்கரையை உபயோகிப்பதாகவும், இது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளை விட அதிகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.