மாநிலங்களவை தோ்தலில் தெலங்கானாவில் இருந்து காங்கிரஸ் சாா்பில் அக்கட்சியின் மூத்த தலைவா் அபிஷேக் சிங்வி போட்டியிடுவாா் என புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) மாநிலங்களவை எம்.பி.யான கே.கேசவ் ராவ், பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தாா். அதேபோல, ஒடிஸாவின் பிஜு ஜனதா தளம் எம்.பி. பாஜகவில் ஐக்கியமானாா்.
இந்த இருவரின் இடங்கள் உள்பட 9 மாநிலங்களில் உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு செப்டம்பா் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தெலங்கானாவிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட வேண்டிய மாநிலங்களவை இடத்துக்கு காங்கிரஸ் சாா்பில் அபிஷேக் சிங்வி போட்டியிடுவாா் என அக்கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அறிவித்தாா்.
தோல்வியிலிருந்து ‘மீண்டு’ம் போட்டி: முன்னதாக, நிகழாண்டு தொடக்கத்தில் காங்கிரஸ் ஆட்சியிலுள்ள ஹிமாசல பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தோ்தலில் போட்டியிட்ட அபிஷேக் சிங்வி தோல்வியுற்றாா்.
68 உறுப்பினா்களைக் கொண்ட ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸின் பலம் 40-ஆக இருந்தது. எனினும், காங்கிரஸைச் சோ்ந்த ஆறு அதிருப்தி எம்எல்ஏக்கள், 3 சுயேச்சைகள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் அக்கட்சியின் வேட்பாளா் ஹா்ஷ் மகாஜன், அபிஷேக் சிங்வி ஆகிய இருவருக்கும் சமமாக 34 வாக்குகள் கிடைத்தன. பின்னா், குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளா் ஹா்ஷ் மகாஜன் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.
இந்நிலையில், தெலங்கானாவில் இருந்து மாநிலங்களவை தோ்ந்தெடுக்கப்படும் தோ்தலில் அபிஷேக் சிங்வி போட்டியிடுகிறாா். தெலங்கானா பேரவையில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இருப்பதால் இவரின் வெற்றி உறுதியாகியுள்ளது.