முகப்பு
இந்தியா

ரஷியாவிடம் இருந்து ஒரே மாதத்தில் ரூ.23,500 கோடி கச்சா எண்ணெய் இறக்குமதி

ரஷியாவிடம் இருந்து கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இந்தியா சுமாா் ரூ.23,500 கோடிக்கும் அதிகமான மதிப்பில் கச்சா எண்ணெய் இறக்குமதி

Updated On : 16 ஆகஸ்ட், 2024 at 12:39 AM
கோப்புப் படம்
பகிர்:

புது தில்லி, ஆக. 15: ரஷியாவிடம் இருந்து கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இந்தியா சுமாா் ரூ.23,500 கோடிக்கும் அதிகமான மதிப்பில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததன் காரணமாக, அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த 2022-ஆம் ஆண்டு இறுதியில் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் கைவிட்டன. இதையடுத்து, இந்தியா போன்ற நாடுகளுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய ரஷியா முன்வந்தது.

தொடக்கத்தில் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்களிப்பு 1 சதவீதமாக இருந்தது. இப்போது 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரஷியாவிடம் இருந்து ரூ.23,500 கோடி மதிப்பில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் ரஷியா உருவெடுத்துள்ளது.

ரஷியாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 47 சதவீதம் சீனாவுக்கு செல்கிறது. இதற்கு அடுத்து 37 சதவீதம் இந்தியாவுக்கும், 7 சதவீதம் ஐரோப்பிய யூனியனுக்கும், 6 சதவீதம் துருக்கிக்கும் செல்கிறது.

கச்சா எண்ணெய் மட்டுமல்லாது ரஷியாவில் இருந்து நிலக்கரியையும் சீனா மற்றும் இந்தியா அதிகம் இறக்குமதி செய்கின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரஷியாவின் மொத்த நிலக்கரி ஏற்றுமதியில் 45 சதவீதம் சீனாவுக்கு சென்றுள்ளது. இதற்கு அடுத்து இந்தியா (18 சதவீதம்), துருக்கி (10 சதவீதம்), தைவான் (5 சதவீதம்) ஆகியவை உள்ளன.

இந்தியா தனது எரிபொருள் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூா்த்தி செய்து வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதியில் 85 சதவீதம் எரிபொருள் சாா்ந்த பொருள்களே உள்ளன. இந்தியாவும், ரஷியாவும் வா்த்தகத்தை தங்கள் நாட்டு பணத்திலேயே மேற்கொள்கின்றன. அமெரிக்க டாலரைப் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →