மகாராஷ்டிர மாநிலம் புணேவில் குடிபோதையில் சொகுசு காரை இயக்கியதில் 2 பேர் பலியான சம்பவத்தில் சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய குற்றச்சாட்டில் மேலும் இருவரை காவல்துறையினர் திங்கள்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
இதன்மூலம், சொகுசு கார் விபத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளதாக புணே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் செவ்வாய்க்கிழமை காலை தெரிவித்தார்.
மேலும், கைதான இருவரும் சிறுவனின் தந்தை மற்றும் மருத்துவர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்ய உதவியவர்கள் என்று காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த மே 19ஆம் தேதி, புணே, கல்யாணி நகரில் மதுபோதையில் 17 வயது சிறுவன் சொகுசு காரை வேகமாக இயக்கி விபத்து ஏற்படுத்தியதில், தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் காரை இயக்கிய சிறுவன், குழந்தைகளை கவனக்குறைவாக விடுதல் மற்றும் குழந்தைகளுக்கு போதை அல்லது மதுப் பழக்கம் ஏற்பட அனுமதிப்பது போன்ற பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவனின் தந்தை அகர்வால் கைது செய்யப்பட்டார்.
மேலும், மருத்துவமனையில் ரத்த மாதிரியை மாற்றிய குற்றத்துக்காக சிறுவனின் தாயும், விபத்தை தான் ஏற்படுத்தியதாக, சரணடையுமானு கார் ஓட்டுநரை வலியுறுத்திய சிறுவனின் தாத்தாவும், ரத்த மாதிரியை மாற்றிய மருத்துவர்கள் என 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களின் மீது 900 பக்க குற்றப்பத்திரிக்கையை புணே காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.