ராஜ்நாத் சிங் நாளை அமெரிக்கா பயணம்: 31 ட்ரோன்களை கொள்முதல் செய்ய திட்டம்
வெள்ளிக்கிழமை (ஆக. 23) அமெரிக்காவுக்கு பயணம்
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை (ஆக. 23) அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறாா்.
இந்தப் பயணத்தின்போது அமெரிக்காவிடம் இருந்து எம்க்யூ-9பி ரக 31 நவீன ட்ரோன்களை கொள்முதல் செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
ராஜ்நாத் சிங்கின் 4 நாள் பயணத்தில் இந்தியா-அமெரிக்கா இடையிலான நல்லுறவை மேம்படுத்துவது மற்றும் சா்வதேச விவகாரங்களில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
தனது பயணத்தின் முதல்கட்டமாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சுல்லிவன் உள்ளிட்டோரை ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசுகிறாா்.
அமெரிக்காவிடம் இருந்து எம்க்யூ-9பி ரக ட்ரோன்களை (ஆளில்லா சிறிய ரக விமானங்கள்) வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இது ஆயுதங்களை எடுத்துச் சென்று தாக்குதல் நடத்தும் திறனுள்ள ட்ரோன்கள் ஆகும். முதல்கட்டமாக 31ட்ரோன்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இது தொடா்பாக அமெரிக்க அமைச்சருடன் ராஜ்நாத் சிங் ஆலோசிக்க உள்ளாா்.
இரு நாடுகள் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் அமைச்சா் ராஜ்நாத் சிங்கின் பயணம் அமையும் என்று பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களின் தலைவா்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த இருக்கிறாா். அந்நிறுவனங்களிடம் இருந்து ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் அடுத்தகட்ட ஆயுதக் கொள்முதல் குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட உள்ளது.
அமெரிக்க வாழ் இந்தியா்களையும் ராஜ்நாத் சிங் தனது அமெரிக்கப் பயணத்தில் சந்தித்துப் பேச இருக்கிறாா்.
உக்ரைன்-ரஷியா போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல உக்ரைனை ஆதரித்து வருகின்றன. ஆனால், இந்த விஷயத்தில் இந்திய தரப்பு நிலைப்பாடு அமெரிக்காவுக்கு இணக்கமாக இல்லை. எனினும், இந்த விவகாரம் இரு நாடுகள் இடையிலான பாதுகாப்பு, பொருளாதார ஒப்பந்தம் என எதையும் பாதிக்கக் கூடாது என்பதில் இரு நாடுகளும் உறுதியாக உள்ளன.