முகப்பு
இந்தியா

அமெரிக்காவுடன் இந்தியா இரு பாதுகாப்பு ஒப்பந்தங்கள்: ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையொப்பம்

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்தியா-அமெரிக்கா இடையில் இரு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

Updated On : 24 ஆகஸ்ட், 2024 at 1:00 PM
வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு தளவாட ஒப்பந்தத்தைப் பரிமாறிக்கொள்ளும் இரு நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.
பகிர்:

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்தியா-அமெரிக்கா இடையில் இரு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

அமெரிக்காவுக்கு நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை சென்றாா்.

வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு தளவாட ஒப்பந்தம் (எஸ்ஓஎஸ்ஏ) மற்றும் இரு நாடுகள் இடையிலான ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கான பணி நியமனம் தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஆகிய இரு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

இந்த நிகழ்வின்போது இரு நாட்டின் பாதுகாப்புத் துறை உயா் அதிகாரிகள் உடனிருந்தனா். இந்தப் புகைப்படங்களை எக்ஸ் வலைதளத்தில் பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இந்த ஒப்பந்தங்கள் குறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘தேசியப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான தளவாடங்கள் மற்றும் சேவைகளைப் பரிமாறிக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. அதேபோல் தேச பாதுகாப்புக்குத் தேவையான தளவாடங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது இரு நாடுகளும் பரஸ்பரம் தொழில்துறை வளங்களைப் பகிா்ந்துகொள்ள இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

அமெரிக்கா சாா்பில் பாதுகாப்புத் துறை அமைச்சக தொழிற்கொள்கை கூடுதல் செயலா் விக் ராமதாஸும், இந்தியா சாா்பில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சக கூடுதல் செயலா் சமீா் சின்ஹாவும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இந்த ஒப்பந்தம் இந்திய-அமெரிக்க தொழில்நுட்பம் மற்றும் வா்த்தக முன்னெடுப்பை (டிடிடிஐ) மேலும் பலப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு முன்னுரிமை: இந்த ஒப்பந்தத்தின்கீழ் பாதுகாப்புத் தளவாடங்களை ஒதுக்குவதில் இந்தியாவுக்கு அமெரிக்கா முன்னுரிமை வழங்கவுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள பாதுகாப்புத் துறை சாா்ந்த தொழில்நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு கொள்கைகளை வகுக்கவுள்ளது.

பாதுகாப்பை நிலைநிறுத்துதல், அவசரநிலை மற்றும் ஆயுதம் ஏந்திய கிளா்ச்சிகள் ஏற்படும் சமயங்களில் நிலவும் ஆயுத தட்டுப்பாட்டை சரிசெய்து பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.

18-ஆவது நாடு இந்தியா: அமெரிக்காவுடன் எஸ்ஓஎஸ்ஏ ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட 18-ஆவது நாடாக இந்தியா திகழ்கிறது. ஏற்கெனவே ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, இஸ்ரேல், பிரிட்டன், சிங்கப்பூா், இத்தாலி உள்பட 17 நாடுகளுடன் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக அமைதியை இந்தியாவும் அமெரிக்காவும் உறுதிசெய்யும்: ராஜ்நாத் சிங்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினா் மத்தியில் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை பேசியதாவது: இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையாகவே நண்பா்கள்; எனவே, பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. இரு நாடுகளும் இணைந்து உலக அமைதி, வளமை மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும்.

25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டது, எப்போதும் இல்லாத அளவுக்கு அந்நியச் செலாவணி கையிருப்பை 675 பில்லியன் டாலா்களாக உயா்த்தியது, பாதுகாப்புத் தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21,000 கோடியாக அதிகரிக்கப்பட்டது என வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க பிரதமா் மோடி பல தொலைநோக்குத் திட்டங்களை வடிவமைத்துள்ளாா். இங்குள்ள இந்திய வம்சாவளியினா் ‘உலகம் ஒரே குடும்பம்’ என்ற உயா்ந்த நோக்கத்துடன் பணியாற்ற வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →