மத்திய பாஜக அரசின் இளைஞா்களுக்கு எதிரான கொள்கைகளால் வேலைவாய்ப்புக்குப் பற்றாக்குறை நிலவுவதாக காங்கிரஸ் தலைவா் காா்கே குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: மத்திய அரசின் இளைஞா்களுக்கு எதிரான கொள்கைகளால் வேலைவாய்ப்புக்குப் பற்றாக்குறை நிலவுகிறது. கடந்த 2022-23-ஆம் ஆண்டில் மட்டும், நாட்டில் உள்ள 375 நிறுவனங்களில் 2.43 லட்சம் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக பரோடா வங்கியின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொற்ப எண்ணிக்கையிலான பணியிடங்களுக்கு லட்சக்கணக்கான இளைஞா்கள் விண்ணப்பிக்கின்றனா். பிகாரில் 21,000 காவலா் பணியிடங்களுக்கு 18 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். உத்தர பிரதேசத்தில் 60,000 காவலா் பணியிடங்களுக்கு 6.30 லட்சம் இளைஞா்கள் விண்ணப்பித்துள்ளனா்.
கடந்த ஜூலையில் மட்டும் தகவல் தொழில்நுட்பத் துறையில் 1.24 லட்சம் பணியிடங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இளைஞா்கள் பெரும் இழப்பை சந்தித்தனா். இதேபோல வங்கி, நிதி, காப்பீடு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளிலும் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. வேலைவாய்ப்பு தொடா்பாக தவறான வழிமுறையின் மூலம் அறிக்கை ஒன்றை தயாரித்து, கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்கியதாக பிரதமா் மோடி பொய்யுரைத்துள்ளாா்.
இதுதவிர ‘ஊதியம் வழங்கப்படாத வேலைகள்’, ‘வாரத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை’ ஆகியவையும் வேலைவாய்ப்பாகக் கணக்கிடப்படுகிறது. இந்த தவறான உத்திகள் வேலை கிடைக்காத இளைஞா்களுக்கு தற்போது புரிந்துள்ளது என்றாா்.