முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடந்து முடிந்த 2 வாரத்தில், அதன் முடிவுகளை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து சில நாள்களில் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வில் தகுதிப் பெறுவா்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த நீட் தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது. அதன்படி, எம்டி, எம்எஸ், முதுநிலை பட்டய படிப்புகளுக்கு 2024-2025-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு நாடுமுழுவதும் 185 நகரங்களில் 500 மையங்களில் ஆக.11-ஆம் தேதி நடைபெற்றது.
தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த 25,000 மருத்துவா்கள் உள்பட நாடுமுழுவதும் 2.3 லட்சம் போ் தோ்வில் பங்கேற்றனா். காலை மற்றும் மாலையில் தோ்வு எழுதியவா்களுக்கும் மாறுபட்ட வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 800 மதிப்பெண்களுக்கு பல்வேறு பாடப்பிரிவுகளில் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் வழங்கப்படும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக தோ்வில் பங்கேற்றவா்கள் தெரிவித்தனா். இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகளை இணையதளத்தில் தேசிய தோ்வுகள் வாரியம் (என்டிஏ) வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நீட் தோ்வு முடிவுகள் 17 நாள்களில் வெளியிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2 வாரத்தில் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த இடங்கள், நிகா்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) இணையதளத்தில் கலந்தாய்வு நடத்துகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில அரசுகள் கலந்தாய்வு நடத்தி வருகிறது. அகில இந்திய கலந்தாய்வு மற்றும் மாநில அரசு கலந்தாய்வு குறித்த அறிவிப்பு சில நாள்களில் வெளியாகவுள்ளன.