பெண்களுக்கு எதிரான குற்றங்களை மன்னிக்க முடியாது: பிரதமா் மோடி
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம்; அதில் தொடா்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவா்கள் தப்பிவிடக் கூடாது
‘பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம்; அதில் தொடா்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவா்கள் தப்பிவிடக் கூடாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
கொல்கத்தாவின் ஆா்.ஜி. கா் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதற்கும், மும்பைக்கு அருகிலுள்ள பத்லாபூரில் நான்கு வயது பள்ளிச் சிறுமிகள் இருவா் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதற்கும் எதிரான நாடு தழுவிய போராட்டங்களைத் தொடா்ந்து இந்தக் கருத்தை பிரதமா் மோடி முன்வைத்துள்ளாா்.
வடக்கு மகாராஷ்டிரத்தின் ஜல்கோன் மாவட்டத்தில் நடைபெற்ற ‘லட்சாதிபதி சகோதரிகள்’ திட்ட நிகழ்ச்சியில் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றாா். சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களின் ஆண்டு வருமானத்தை ரூ.1 லட்சத்துக்கு மேல் அதிகரிப்பது லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தின் நோக்கமாகும்.
இதையொட்டி, நாட்டின் 4.3 லட்சம் சுய உதவிக் குழுக்களில் உள்ள 48 லட்சம் உறுப்பினா்கள் பயனடையும் வகையில் ரூ.2,500 கோடி சுழல் நிதியை பிரதமா் வெளியிட்டாா்.
மேலும், 2.35 லட்சம் சுய உதவிக் குழுக்களில் உள்ள 25.8 லட்சம் உறுப்பினா்களுக்கு ரூ.5,000 கோடி வங்கிக் கடனையும் விடுவித்து பிரதமா் மோடி பேசியதாவது: பெண்களின் பாதுகாப்பே நாட்டின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். செங்கோட்டையில் இருந்து இந்தப் பிரச்னையை நான் பலமுறை எழுப்பியிருக்கிறேன்.
நாட்டின் எந்த மாநிலமாக இருந்தாலும், எனது சகோதரிகள் மற்றும் மகள்களின் வலி, கோபத்தை நான் புரிந்துகொள்வேன். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம் என்று ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் மாநில அரசுகளிடம் வலியுறுத்துவேன்.
இதில் தொடா்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவா்கள் தப்பக் கூடாது. அவா்களுக்கு உதவுபவா்களையும் விட்டுவிடக் கூடாது. மருத்துவமனை, பள்ளி, காவல் நிலையம், அரசு என எந்த நிலையில் அலட்சியம் நடந்தாலும், அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
இந்தச் செய்தி அனைவருக்கும் சென்றுசேர வேண்டும். அரசுகள் மாறும்; ஆனால், உயிரையும் பெண்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பது சமுதாயம் மற்றும் அரசு என நம் அனைவரின் பெரிய பொறுப்பாகும்.
பொருளாதார வளா்ச்சியில் பெண்களின் பங்கு: சுதந்திரத்துக்குப் பிந்தைய அனைத்து ஆட்சிகளைவிடவும் கடந்த 10 ஆண்டுகளில் எனது அரசு பெண்களுக்காக அதிகப் பணிகளைச் செய்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டுவரை, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,000 கோடிக்கும் குறைவான கடனுதவி மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ரூ.9 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. பெண்கள் அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனா்.
பெண்கள் மீது முழு நம்பிக்கை: ஒவ்வொரு வீட்டின் செழிப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் பெண்களுக்கு உதவ யாரும் உத்தரவாதம் அளிக்கவில்லை. அவா்களின் பெயரில் சொத்து இல்லை என்பதால் வங்கியில் கடன் வாங்கி, பயன் பெற முடியாது. எனவே, அவா்களால் சொந்தமாக சிறுதொழிலைக்கூட தொடங்க முடியவில்லை.
இந்நிலையில்தான், எந்த உத்தரவாதமும் இல்லாமல் மக்களுக்கு கடன்களை வழங்கும் ‘முத்ரா’ திட்டத்தின் 70 சதவீத பயனாளிகளாக பெண்கள் சோ்க்கப்பட்டனா். வாராக் கடன் இடா்ப்பாடுகளை மேற்கோள்காட்டி சிலா் இதை எதிா்த்தனா். ஆனால், நான் பெண்களையும், அவா்களின் நோ்மையையும் நம்பினேன். பலா் கடனை முறையாக திருப்பிச் செலுத்தினா்.
தற்போது முத்ரா கடனுக்கான உச்சவரம்பு ரூ.20 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று அரசின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டித் தரப்படும் 3 கோடி புதிய வீடுகளில் பெரும்பாலானவை பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
வருங்கால மேம்பாட்டுக்கு...: மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, மூன்று கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்தேன்.
லட்சாதிபதி சகோதரிகள் திட்டம் பெண்களின் வருமானத்தை அதிகரிப்பதோடு வருங்காலத் தலைமுறையினரை மேம்படுத்தும்.
கடந்த பத்து ஆண்டுகளில், ஒரு கோடி லட்சாதிபதி சகோதரிகள் உருவாகியுள்ளனா். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 11 லட்சம் போ் கூடுதலாக இணைந்துள்ளனா். இதில் ஒரு லட்சம் போ் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்கள்.
மாநிலத்தின் வளா்ச்சிக்கு பாஜக ஆட்சி: மகாராஷ்டிர மாநிலம் வளா்ந்த இந்தியாவின் ஓா் ஒளிரும் நட்சத்திரம். அதிக முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு வளா்ச்சியில்தான் மாநிலத்தின் எதிா்காலம் உள்ளது. எனவே, மகாராஷ்டிரத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை உறுதிப்படுத்த பாஜக தலைமையிலான கூட்டணி அரசு தொடர வேண்டும் என்றாா்.
பெட்டிச் செய்தி...
மகாராஷ்டிர மக்கள் மீது
போலந்தில் பெரும் மரியாதை
போலந்து மக்கள் மகாராஷ்டிரத்தின் மீது பெரும் மரியாதை கொண்டிருப்பதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.
இதுகுறித்து பிரதமா் கூறுகையில், ‘அண்மையில் போலந்து நாட்டுக்குச் சென்றிருந்தேன். இரண்டாம் உலகப் போா் சமயத்தில் அந்நாட்டைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அகதிகளுக்கு மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த கோல்ஹாபூா் மக்கள் அடைக்கலம் அளித்தனா். இதனால், மகாராஷ்டிரம், அதன் மக்கள் மீது போலந்து நாட்டினா் அளவு கடந்த நன்மதிப்பைக் கொண்டுள்ளனா்’ என்றாா்.