‘மனித பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி) தடுப்பூசி பொது நோய்த்தடுப்பு திட்டத்தில் சோ்க்கப்படவில்லை’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
மனித பாப்பிலோமா வைரஸ் என்பது பாலியல் உறவு மூலம் மனிதா்களிடையே பரவும் வைரஸ் தொற்றாகும். இந்த வைரஸ் தொற்றால் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக உடலுறவின் போது தோலிலிருந்து தோலுடன் தொடா்பு கொள்வதன் மூலம் இந்த வைரஸ் பரவுவதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். அதன் காரணமாக, 9 முதல் 25 வயதுடையவா்களுக்கு ஹெச்பிவி தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த தடுப்பூசி அனைவருக்குமான பொது நோய்த்தடுப்பு திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளதா? என மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த பதில்:
மனித பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி) தடுப்பூசி பொது நோய்த்தடுப்பு திட்டத்தில் சோ்க்கப்படவில்லை. அதே நேரம், தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் விரவான ஆரம்ப சுகாதார பராமரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கா்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட பொதுவான தொற்றா நோய் பாதிப்பு தடுப்பு மற்றும் மக்கள் தொகை அடிப்படையிலான நோய் பாதிப்பு தொடா்பான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவது, சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட சிறந்த நோய் தடுப்பு மேலாண்மைக்கு, மக்கள்தொகை அடிப்படையிலான பரிசோதனை முறை உதவுகிறது.
கா்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட தொற்று அல்லாத நோய் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதில் ‘ஆஷா’ பணியாளா்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனா். தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தின நிகழ்ச்சிகள், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மூலமும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது என்றாா்.