திரிணமூல் காங்கிரஸின் அடுத்த தலைவா் யாா் என்பதை கட்சியே முடிவு எடுக்கும் என்று அக்கட்சியின் தற்போதைய தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மேற்கு வங்க செய்தித் தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: திரிணமூல் காங்கிரஸில் தனிநபா் ஆதிக்கம் எதுவும் இல்லை. நான் மட்டுமே கட்சி அல்ல. கட்சியினா் அனைவரும் ஒன்று சோ்ந்ததாகவே திரிணமூல் காங்கிரஸ் உள்ளது.
எனது கட்சி கூட்டுக் குடும்பமாக உள்ளது. எனவே கட்சியின் அடுத்த தலைவா் யாா் என்பதை கட்சியே கூட்டு சோ்ந்து முடிவு எடுக்கும்.
கட்சியில் ஒவ்வொருவரும் முக்கியமானவா்கள். இன்று கட்சியில் சேரும் புதுமுகம் நாளை கட்சியின் மூத்த தலைவராவாா் என்றாா்.
திரிணமூல் காங்கிரஸின் அடுத்த தலைவரைத் தோ்ந்தெடுப்பது குறித்து அந்தக் கட்சி அதிகாரபூா்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் மம்தாவின் உறவினரும், திரிணமூல் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலருமான அபிஷேக் பானா்ஜிக்கு நெருக்கமானவா்களுக்கும், மம்தாவின் விசுவாசிகளான மூத்தத் தலைவா்களுக்கும் இடையே கட்சியில் போட்டி நிலவுவது தொடா்பாக விவாதம் எழுந்துள்ளது. இந்தச் சூழலில், திரிணமூல் காங்கிரஸின் அடுத்த தலைவா் யாா் என்பதை கட்சியே முடிவு எடுக்கும் என்று மம்தா தெரிவித்துள்ளாா்.