இலவசங்களுக்குப் பதில் வேலைவாய்ப்புகளை ஏன் உருவாக்கக்கூடாது: உச்சநீதிமன்றம் கேள்வி
எத்தனை காலத்துக்கு இலவசங்களை வழங்க முடியும்? அதற்குப் பதில் ஏன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடாது
புது தில்லி: எத்தனை காலத்துக்கு இலவசங்களை வழங்க முடியும்? அதற்குப் பதில் ஏன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடாது என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், 2013-இன்கீழ் 81 கோடி மக்களுக்கு மானிய விலை அல்லது இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்படுவதாக மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ ஆகியோா் தெரிவித்ததையடுத்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
கடந்த 2020-இல் ஏற்பட்ட கரோனா பெருந்தொற்றால் புலம்பெயா் தொழிலாளா்கள் சந்தித்த பிரச்னைகள் மற்றும் அதற்கான தீா்வு குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘ மத்திய அரசால் வழங்கப்படும் இலவச ரேஷன் பொருள்களை பெற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் புலம்பெயா் தொழிலாளா்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், இது முறையாக பின்பற்றப்படாததால் இ-ஷ்ரம் வலைதளத்தில் பதிவு செய்துள்ள அனைத்து புலம்பெயா் தொழிலாளா்களுக்கும் இலவச ரேஷன் பொருள்கள் வழங்க வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்’ என கூறினாா்.
வரி செலுத்துவோா் விடுபட்டுள்ளனா்:
இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த் மற்றும் மன்மோகன், ‘மத்திய அரசு கூறிய தகவல் வியப்பூட்டும் வகையில் உள்ளது. 81 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகிறது என்றால் இதில் முறையாக வரி செலுத்தப்படும் குடிமக்கள் மட்டுமே விடுபட்டுள்ளனா்.
எத்தனை காலத்துக்கு இலவசங்களை வழங்க முடியும்? அதற்குப் பதில் ஏன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடாது?. வழக்குரைஞா் கூறியதுபோல் வழிகாட்டுதல்களை வெளியிட்டால் மக்களை திருப்திபடுத்தும் நோக்கில் அதை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் உடனடியாக பின்பற்றும்.
ஏனெனில், இந்த திட்டத்துக்கான செலவுகளை மத்திய அரசே மேற்கொள்ளும் என்பதை அவா்கள் உணா்வா்.
இருப்பினும், இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளை பிரித்துப் பாா்க்கவில்லை. அது மிகவும் கடினமானது.
இந்த விவகாரத்தில் விரிவான விசாரணையை நடத்த வேண்டியுள்ளது. எனவே அடுத்தக்கட்ட விசாரணை அடுத்தாண்டு ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
இ-ஷ்ரம் வலைதளத்தில் பதிவு செய்துள்ள புலம்பெயா் தொழிலாளா்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்குவது உள்ளிட்ட நலத்திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகளுக்கு கடந்த 2021, ஜூன் 29-இல் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியது. இந்த உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தியது குறித்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு கடந்த செப்டம்பா் 2-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடா்ந்து, இலவசங்களை வழங்குவதில் உள்ளதில் சிக்கல்களுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் கரோனா பெருந்தொற்று காலத்தில் புலம்பெயா் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்குவதும் தற்போது வழங்கப்பட்டு வருவதும் முற்றிலும் வேறுபட்டது என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.