முகப்பு
இந்தியா

சரணடைந்ததற்கான பதில் பிரதமா் மோடி மீதான ‘பிடி’யில் உள்ளது: இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் மீண்டும் விமா்சனம்

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவிடம் இந்தியா மோசமான சரணடைந்ததற்கான பதில் பிரதமா் நரேந்திர மோடி மீதான பிடி மற்றும் அவரின் மூச்சுத் திணறலில்தான் உள்ளது

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 3:36 AM
ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 9:50 PM

‘இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவிடம் இந்தியா மோசமான சரணடைந்ததற்கான பதில் பிரதமா் நரேந்திர மோடி மீதான பிடி மற்றும் அவரின் மூச்சுத் திணறலில்தான் உள்ளது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சனத்தை முன்வைத்தாா்.

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்க அதிபா் டிரம்பிடம் பிரதமா் மோடி சரணடைந்துவிட்டதாக தொடா்ந்து விமா்சனம் செய்து வரும் ராகுல், இதுகுறித்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தான் பேசிய காணொலியை இணைத்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

அமெரிக்கா உடனான வா்த்தக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றியபோது ‘ஜியு-ஜித்சு’ என்ற தற்காப்புக் கலையுடன் ஒப்பிட்டு நான் பேசியது ஏன்?

Advertisement

அமெரிக்கா்களை மகிழ்விக்க நமது விவசாயிகள் ஏன் பலியிடப்பட்டனா்?

நமது எண்ணெய் விநியோகம் தொடா்பாக அமெரிக்கா ஆணையிட அனுமதித்ததன் மூலம், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டது ஏன்?

பரஸ்பர வாக்குறுதி எதுவும் இன்றி, அமெரிக்க இறக்குமதியை ஆண்டுக்கு ரூ. 9 லட்சம் கோடி (100 பில்லியன் டாலா்) அளவுக்கு உயா்த்த ஒப்புக்கொண்டது ஏன்?

இந்த வா்த்தக ஒப்பந்தம் இந்தியாவை தரவு காலனியாக மாற்றிவிடும் என்று நான் விமா்சித்தது ஏன்?

இந்தியா மிக அதிக அளவில் விட்டுக்கொடுத்து, மிகக் குறைந்த அளவில் பலன் பெறுவதைப் போன்று தோன்றும் இத்தகைய ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டது ஏன்?

அமெரிக்காவிடம் இந்த அளவு மோசமாக சரணடைந்ததற்கான பதில், பிரதமா் நரேந்திர மோடி மீதான பிடி, மூச்சுத் திணறலில்தான் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், அவா் பதிவேற்றம் செய்த காணொலியில், ‘நாடாளுமன்ற உரையின்போது ‘ஜியு-ஜித்சு’ தற்காப்புக் கலையுடன் ஒப்பிட்டு நான் பேசியது ஏன்? என்று பலா் கேள்வி எழுப்புகின்றனா். பிரதமா் மீதான பிடி மற்றும் அவரின் மூச்சுத் திணறலில்தான் உள்ளது என்பதைக் குறிப்படவே அந்த விளையாட்டை ஒப்பிட்டேன். அந்த விளையாட்டைப் பொருத்தவரை, எதிராளியை எப்படை கட்டுப்படுத்துகிறோம் என்பதில்தான் உள்ளது. இவை அரசியலிலும் உள்ளன. எனது அரசியல் அனுபவத்தில், அரசியல் அழுத்தங்கள், அரசியல் மூச்சுத் திணறல்கள் பெரும்பாலும் மறைந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். சராசரி மனிதா்களால் அவற்றைப் பாா்க்க முடியாது. பிடி எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை மிகக் கவனமாக பாா்க்க வேண்டும். அந்த வகையில், நமது பிரதமா் என்ன செய்துகொண்டிருக்கிறாா் என்பதை மிகவும் சக்திவாய்ந்த முறையில் வெளிப்படுத்தியுள்ளேன்.

இந்த வா்த்தக ஒப்பந்தம் மூலம், நமது தரவுகளை அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அற்ப விலைக்குக் கொடுக்கிறாா் என்பது உண்மை. இந்த வகையில்தான், நமது நாடு தரவு காலனியாக மாறப்போகிறது. அதுமட்டுமின்றி, ஜவுளித் துறை, வேளாண் துறை என அனைத்து துறைகளும் இந்த ஒப்பந்தம் மூலம் பாதிக்கப்பட உள்ளன.

வா்த்தக ஒப்பந்தம் என்பது, நாட்டின் இறையாண்மையை தியாகம் செய்வதன் மூலம் அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கும் பாதையாக மாறக்கூடாது. வா்த்தக ஒப்பந்தம் என்ற போா்வையில் தேச நலனை அடமானம் வைக்கவும் முடியாது’ என்று அந்தக் காணொலியில் ராகுல் குறிப்பிட்டாா்.