17 நாள்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜித் சிங் தலேவாலின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டது.
வேளாண் பயிா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
விவசாயிகளின் இந்த கோரிக்கைகளை ஏற்க வலியுறுத்தி, பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் உள்ள கனௌரி போராட்டக் களத்தில் ஜக்ஜித் சிங் தலேவால் கடந்த நவ. 26-ஆம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்யா காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரிணை மேற்கொண்டது.
அப்போது, ஜக்ஜித் சிங் தலேவாலின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள் அமா்வு ‘மனித உயிா் விலைமதிப்பற்றது’ என்பதை வலியுறுத்தியது. மேலும், ஜக்ஜித் சிங்கை சந்தித்து, மருத்துவ உதவி வழங்கி, அவரது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள அவரை வற்புறுத்துமாறு மத்திய அரசுக்கும், பஞ்சாப் மாநில அரசுக்கும் உத்தரவிட்டது.
இதில் ஜக்ஜித் சிங்குக்கு எதிராக எந்த பாதுகாப்புப் படைகளும் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்யுமாறு சொலிசிட்டா் ஜனரல் துஷாா் மேத்தா மற்றும் பஞ்சாப் தலைமை வழக்குரைஞா் குா்மிந்தா் சிங் ஆகியோரிடம் நீதிபதிகள் அமா்வு கேட்டுக்கொண்டது.
மேலும், போராடும் விவசாயிகள் அமைதியான போராட்டங்களை மேற்கொள்ளவும், தற்காலிகமாக நெடுஞ்சாலைகளில் இருந்து விலகிச் செல்லவும் அறிவுறுத்தியது.