முகப்பு
இந்தியா

2026-க்குள் நக்சல்களை ஒழிப்போம்: அமித் ஷா உறுதி!

சத்தீஸ்கரில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 287 நக்சல்கள் கொல்லப்பட்டு, 1000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்

Updated On : 15 டிசம்பர், 2024 at 5:36 PM
அமித் ஷா - -
பகிர்:

சத்தீஸ்கரில் வருகிற 2026 ஆம் ஆண்டுக்குள் நக்சல்களை முழுவதுமாக ஒழிக்க உறுதியளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் காவல்துறையின் 25 ஆண்டுகால தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரித்து, இன்று 'குடியரசுத் தலைவரின் காவல் வண்ண' விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நக்சல்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கை, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவர்கள் மேற்கொண்ட அயராத முயற்சிகளை அங்கீகரித்து இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

இதில் கலந்துகொள்ள 3 நாள்கள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சத்தீஸ்கர் சென்றுள்ளார். அவர் ஜக்தல்புருக்குச் சென்று, சரணடைந்த மாவோயிஸ்ட்கள் மற்றும் அங்கிருக்கும் மக்களைச் சந்தித்தார்.


இந்த நிகழ்வில் பேசிய அமித் ஷா, “நான் சத்தீஸ்கர் மக்களுக்கு உறுதியளிக்கிறேன். நீங்கள் சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். நாங்கள் 2026 மார்ச் மாதத்துக்குள் நக்சல்களை மாநிலத்தில் இருந்து ஒழிக்க உறுதியாக இருக்கிறோம்.

Advertisement


சத்தீஸ்கர் காவல்துறையினர் நக்சல்களுக்கு எதிராக பல வெற்றிகளைப் பெற்றுள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 287 நக்சல்கள் கொல்லப்பட்டு, சுமார் 1000 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 837 நக்சல்கள் சரணடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.


மேலும், “நாட்டிலுள்ள அனைத்து காவல் படைகளிலும் சத்தீஸ்கர் காவல் படை துணிச்சலானது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். சத்தீஸ்கர் உருவாகி 25வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில், குடியரசுத் தலைவரின் வண்ண விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறீர்கள். இது உங்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, துணிச்சல் மற்றும் மக்கள் மீதான உங்களின் அன்பிற்கான சான்றாகும்” என்று பேசினார்.


இந்த பயணம் மூலம் அரசின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை எதிர்கொண்டு, சத்தீஸ்கரின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.