மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை நோக்கிச் செல்ல இலங்கை அதிபருடனான பேச்சில் இருவரும் ஒப்புக் கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, இன்று காலை குடியரசுத் தலைவருக்கு வருகை தந்தார். அங்கு அவரை குடியரசுத் தலைவரும், பிரதமரும் வரவேற்றனர்.
தொடர்ந்து, ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் திசநாயக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
”இந்தியாவில் பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டபோது இலங்கையிலும் அது கொண்டாடப்பட்டது. சென்னை - யாழ்பானம் இடையேயான விமான சேவை, கப்பல் சேவை ஆகியவை சுற்றுலாவை பலப்படுத்தி நமது கலாச்சார உறவுகளை வலுப்படுத்தியுள்ளன.
நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை படகு சேவைகள் வெற்றிகரமாக தொடங்கப்பட்டதை அடுத்து, இப்போது இந்தியாவின் ராமேசுவரம் மற்றும் தலைமன்னார் இடையே கப்பல் சேவை தொடங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். இந்த விஷயத்தில், மனிதாபிமான அணுகுமுறையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பது நாங்கள் ஒப்புக் கொண்டோம்.
இலங்கையில் கட்டுமானம் மற்றும் நல்லிணக்கம் குறித்து பேசினோம். தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக அமல்படுத்துவதற்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன்.
இலங்கை அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கான முயற்சியில் இந்தியா எப்போது நம்பகமான அண்டை நாடாக இருக்கும் என்று திசநாயகவிடம் நான் உறுதியளித்துள்ளேன்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.