மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தள்ளியதால் தனது தலையில் காயம் ஏற்பட்டதாக பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி வியாழக்கிழமை குற்றச்சாட்டினார்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அமித் ஷா பேசியபோது அம்பேத்கரை அவமதித்ததாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
மேலும், அமித் ஷா பதவி விலகக் கோரி ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது.
அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் திவார் வரை பேரணியாக வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க உள்ளே செல்ல முயன்றனர்.
அப்போது, நுழைவு வாயிலில் அம்பேத்கரை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக எம்பிக்கள் போட்டி போராட்டம் நடத்தினர்.
இது தள்ளுமுள்ளாக மாறிய நிலையில், பாஜகவின் எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட சக உறுப்பினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது ராகுல் காந்தி தள்ளிய ஒரு எம்பி தன் மீது விழுந்ததால் தனக்கு காயம் ஏற்பட்டதாக பிரதார் சந்திர சாரங்கி தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி கூறியதாவது:
”உங்கள் கேமிராக்களிலேயே இந்த சம்பவம் பதிவாகியிருக்கும். நான் நாடாளுமன்ற வாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றேன். அப்போது, பாஜக எம்பிக்கள் என்னை வழிமறித்து தள்ளினார்கள், மிரட்டல் விடுத்தார்கள். அதனால் இது நடந்தது.
தள்ளுமுள்ளு நடந்தது உண்மைதான். இந்த சலசலப்புக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். ஆனால், இது நுழைவு வாயில், உள்ளே செல்ல எங்களுக்கு உரிமை உண்டு. அரசியலமைப்பை தாக்குவதும் அம்பேத்கரை அவமதிப்பதுமே முக்கிய பிரச்னை” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.