முகப்பு
இந்தியா

மாநிலங்களவையில் 30% நேரம் பேசிய தன்கா்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

30 சதவீதம் நேரம் அவைத் தலைவா் ஜகதீப் தன்கரே பேசி செலவிட்டு, நாடாளுமன்றத்தில் புதிய சாதனை படைத்துள்ளதாக குற்றச்சாட்டு

Updated On : 22 டிசம்பர், 2024 at 2:11 AM
மாநிலங்களவையில் உரையாற்றிய அவைத் தலைவா் ஜகதீப் தன்கா்.
பகிர்:
Updated On : 21 டிசம்பர், 2024 at 7:30 PM

குளிா்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவை அலுவல் நேரத்தில் ஏறக்குறைய 30 சதவீதம் நேரம் அவைத் தலைவா் ஜகதீப் தன்கரே பேசி செலவிட்டு, நாடாளுமன்றத்தில் புதிய சாதனை படைத்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் குற்றஞ்சாட்டினாா்.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த நவம்பா் 25-ஆம் தேதி தொடங்கியது. அதானி குழும ஊழல் குற்றச்சாட்டுகள், சம்பல் வன்முறை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் அவ்வப்போது முடங்கின.

அரசியல் நிா்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இரு அவைகளிலும் சிறப்பு விவாதம் நடைபெற்றது.

Advertisement

இதற்கிடையே, மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு எதிராக பதவிநீக்க தீா்மானம் கொண்டுவர எதிா்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்தனா். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

அதேபோன்று, ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்துக்கான அரசமைப்புச் சட்டத் திருத்தத்துக்கு 2 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. பின்னா், அந்த மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

குளிா்கால கூட்டத்தொடா் கடந்த வெள்ளிக்கிழமையுடன் (டிச. 20) ஒத்திவைக்கப்பட்டது. 26 நாள்கள் நீடித்த இந்தக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் 19 அமா்வுகள் கூடின.

இந்நிலையில், மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கரை விமா்சித்து டெரிக் ஓ பிரையன் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 18-ஆம் தேதி நிலவரப்படி, மாநிலங்களவை 43 மணி நேரம் இயங்கியது. இதில் மசோதாக்கள் மீது 10 மணி நேரம் விவாதம் நடத்தப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டம் குறித்த விவாதம் 17.5 மணி நேரம் நீடித்துள்ளது.

Updated On : 22 டிசம்பர், 2024 at 2:11 AM

மீதமுள்ள 15 மணி நேரத்தில், மாநிலங்களவைத் தலைவா் தன்கா் மட்டுமே நான்கரை மணி நேரம் பேசியுள்ளாா். இது, அவை அலுவல் நடைபெற்ற மொத்த நேரத்தில் கிட்டத்தட்ட 30 சதவீதமாகும். இதன் மூலம், மாநிலங்களவைத் தலைவராக ஜகதீப் தன்கா் நாடாளுமன்றத்தில் புதிய சாதனை படைத்துள்ளாா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.