தில்லி ரோகினி பகுதியில் கடந்த வாரம் இ-மெயிலில் இரு பள்ளிகளுக்கு வெடுகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைச் செய்தவர்கள் அந்தப் பள்ளியின் மாணவர்களே என தில்லி காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
தில்லி சிறப்பு காவல்படையினர் இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து விசாரணை செய்தபோது, அவை அந்தந்த பள்ளிகளில் படிக்கும் இரு மாணவர்களால் விடுக்கப்பட்டதாகத் தெரியவந்தது. இரு மாணவர்களும் பள்ளித் தேர்வுக்கு படிக்காததால் தேர்வை ஒத்தி வைப்பதற்காக இவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளனர். இருவரும் பதின்வயது மாணவர்கள் என்பதால் அறிவுரை வழங்கி அனுப்பியதாக தில்லி காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த டிச. 14 அன்று இதேபோன்று ஒரு தனியார் பள்ளி மாணவன் பள்ளிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அவரது வீட்டிற்குச் சென்று காவல்துறையினர் எச்சரித்தனர். மேலும், அந்த மாணவனின் பெற்றோரிடம் அவரது நடவடிக்கை குறித்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தினர்.
டிச. 13 மற்றும் 17 தேதிகளில் தில்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. டிச. 13 அன்று மட்டுமே 30 பள்ளிகளுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் வந்தன. இதுபோன்ற சம்பவங்கள் தில்லியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்களுடன் பேசிய தில்லி முன்னாள் முதல்வர் கேஜரிவால் தேசிய தலைநகரில் பள்ளிகளுக்க்கு தொடர்ச்சியான வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்தார்.
இதுபோன்ற அச்சுறுத்தல்களால் குழந்தைகளின் மனதில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கல்வி மீது ஏற்படக்கூடிய தாக்கம் குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், இவ்வாறு தொடர்ந்து நடந்தால் அவர்கள் படிப்பும் மனநலனும் பாதிக்கும் என்று கூறினார்.
கடந்த நவம்பர் 19 அன்று, வெடிகுண்டு மிரட்டல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அவசர நிலை பிரச்னைகளை சமாளிக்க விரிவான செயல் திட்டத்தை உருவாக்க அரசு மற்றும் காவல்துறைக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்கு காலக்கெடுவாக 8 வாரங்களை நீதிமன்றம் நிர்ணயித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.