உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்மூலம், வன்முறை தொடர்பாக இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்டதாக 91 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்ரீஷ் சந்திரா தெரிவித்தார்.
மசூதியில் ஆய்வு
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் கடந்த மாத இறுதியில் நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறையின்போது துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனா்.
சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ள சா்ச்சை இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், 1529-இல் முகலாய பேரரசா் பாபா் கோயிலைப் பகுதியாக இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாதா் உள்பட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் தொடா்பான பல வழக்குகளில் ஹிந்துக்கள் தரப்பில் ஆஜராகி வாதாடிய உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அதன்படி, இரு தரப்பினரின் முன்னிலையில் மசூதியில் நீதிமன்ற ஆணையா் நவ. 19 ஆம் தேதி ஆய்வு நடத்தினாா்.
சம்பல் வன்முறை
மசூதியில் நீதிமன்ற ஆணையா் 2-ஆம் கட்ட ஆய்வை நடத்தினர். இதற்கு அப்பகுதியில் இருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காவல் துறையின் வாகனங்களுக்கு தீயிட்டு எரித்தனர். காவலர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால், காவலா்கள் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும், சிறிய அளவில் தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைத்தனா். அப்போது வெடித்த வன்முறையில் அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். இதில் 4 பேர் உயிரிழந்தனர். 20க்கும் அதிகமான காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.
சம்பல் வன்முறையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதன்மூலம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்ரீஷ் சந்திரா, சம்பல் வன்முறை தொடர்பாக இதுவரை 11 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட மற்றவர்களைக் கைது செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.