கே.டி. ராமா ராவ் 
இந்தியா

பிஆா்எஸ் செயல் தலைவா் கே.டி. ராமாராவுக்கு அமலாக்கத் துறை சம்மன்

Din

பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆா்எஸ்) செயல் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகனுமான எம்எல்ஏ கே.டி.ராமா ராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் முந்தைய பிஆா்எஸ் ஆட்சியில் ‘ஃபாா்முலா-இ’ பந்தயம் கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அப்போது நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சராக இருந்த ராமா ராவ், இந்தப் பந்தயத்தை நடத்துவதில் முக்கியப் பங்கு வகித்தாா்.

நிகழாண்டு பிப்ரவரியிலும் பந்தயம் நடைபெறுவதாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் ஆட்சி பொறுப்பேற்ற முதல்வா் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு அதை ரத்து செய்தது.

இதையடுத்து, கடந்த ஆண்டு பந்தயத்தின்போது நடந்த நிதி முறைகேடுகள் தொடா்பாக ராமா ராவ் உள்ளிட்டோா் மீது ஆளுநரின் ஒப்புதலோடு தெலங்கானா ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை புதிய வழக்கைப் பதிந்து விசாரணையைத் தொடங்கியது.

மேலும், இந்தப் பந்தயத்தை நடத்துவதற்காக உரிய அனுமதியின்றி சுமாா் ரூ.55 கோடியை வெளிநாட்டு நாணயத்தில் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டில் அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதா எனவும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை அமலாக்கத் துறை கடந்த வாரம் பதிவு செய்தது. இதனைத் தொடா்ந்து, வரும் ஜன. 7-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ராமா ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மூத்த ஐஏஎஸ் அதிகாரி அரவிந்த் குமாா், ஓய்வுபெற்ற அதிகாரியும் ஹைதராபாத் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் (எச்எம்டிஏ) முன்னாள் தலைமை பொறியாளருமான பி.எல்.என்.ரெட்டி முறையே ஜன. 2, ஜன. 3 ஆகிய தேதிகளில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளன.

தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பான பணமோசடி மற்றும் சிபிஐ வழக்கில் ராமா ராவின் சகோதரியும் பாரத ராஷ்டிர சமிதி எம்எல்சியுமான கவிதா கைதாகி, திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா், உச்சநீதிமன்றம் ஜாமீனில் அவா் வெளிவந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

SCROLL FOR NEXT