இந்தியா

பிகார்: தலித் பிரிவினரை கோயில் பூசாரிகளாக்கி பிரதிநிதித்துவம் அளித்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி காலமானார்!

பிகாரில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆச்சார்யா கிஷோர் குணால் காலமானார் - தலைவர்கள் இரங்கல்!

DIN

பாட்னா : பிகார் மாநிலத்தில் தலித் பிரிவினருக்கு பிரதிநிதித்துவமும் முக்கியத்துவமும் அளித்து வந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆச்சார்யா கிஷோர் குணால் மாரடைப்பால் இன்று(டிச. 29) காலமானார். அவருக்கு வயது 74. அன்னாரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஐபிஎஸ் அதிகாரியாக சேவையாற்றி ஓய்வு பெற்ற ஆச்சார்யா கிஷோர் குணால், மஹாவீரர் கோயில் அறக்கட்டளை (மஹாவீர் மந்திர் டிரஸ்ட்) நிறுவனரும் அதன் செயலரும்கூட. முன்னாள் பிரதமர்கள் வி.பி. சிங் மற்றும் சந்திர சேகர் ஆகியோர் பிரதமராக இருந்த காலத்தில், அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் இவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்.

பிகார் மாநில அரசின் அறநிலையத்துறை கட்டளை தலைவராக இவர் இருந்தபோது இவரது தலைமையின்கீழ், பாரம்பரியமிக்க பழமை வாய்ந்த இடங்களில் நூறு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. பாட்னாவிலுள்ள அனுமன் கோயில், ஹாஜிபூரிலுள்ள ராம் சௌரா ஆலயம், புத்த கயாவிலுள்ள ஜகந்நாதர் ஆலயம், வைஷாலியிலுள்ள சதுர்முக மகாதேவர் ஆலயம், முஸாஃபரிலுள்ள கரீப் நாதர் ஆலயம் உள்பட பல கோயில்கள் அவற்றுள் அடக்கம்.

இவரது திறன்மிகு நிர்வாகத்தால் ஆயிரக்கணக்கான கோயில்கள் புனரமைக்கப்பட்டதுடன், கோயில் நிலப் பகுதிகள் ப்ளாட் போட்டு விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல, பிகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள கேசரியா பகுதியில் ரூ.500 கோடியில் ‘ராமாயண கோயில்’ எழுப்பப்பட்டதற்கு இவரது முயற்சியே முக்கிய காரணமாகும்.

புத்தகங்கள் பல எழுதியுள்ள மறைந்த குணால், தலித் பிரிவு மக்களிடையே பெரும் நன்மதிப்பைப் பெற்று விளங்கியவராவார். தலித் மக்கள் குறித்து அவர் எழுதிய புத்தகங்களில் குறிப்பிடும்படியாக ‘தலித் தேவோ பவ’ பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அவர் எழுதிய ‘அயோத்தியா ரீவிசிட்டெட்’, ராமர் கோயில் - பாபர் மசூதி இடம் விவகார வழக்கு விசாரணையின்போது தகவல் சரிபார்ப்பு உள்பட பல்வேறு விஷயங்களில் உதவிகரமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அவரது முயற்சியால் பிகார் தலைநகர் பாட்னாவிலுள்ள மஹாவீர் ஆலயம் உள்பட பல்வேறு முக்கிய கோயில்களில் தலித் பிரிவைச் சேர்ந்தோர் பூசாரிகளாக நியமிக்கப்படுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

காவல்துறை பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின், காமேஷ்வர் சிங் தர்பங்கா சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தராக 4 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரையில், உயர் சாதிப் பிரிவாக கருதப்படும் ‘பூமிஹார்’ சமூகப்பிரிவில் பிறந்தவரான குணால், தனது மகன் சாயன் குணாலை தலித் பிரிவைச் சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அவரது மருமகள் ஷாம்பவி சௌத்ரி பிகார் அமைச்சர் அசோக் சௌத்ரியின் மகள் என்பதும் சமஸ்திபூர் மக்களவை தொகுதி உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க பிகாரில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை உள்பட 3 மருத்துவமனைகளை அமைத்து சமூக சேவையாற்றி வந்தார்.

இந்த நிலையில், அன்னாரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிகார் முதல்வர் நிதீஷ் குமார், குணாலை ‘திறன்மிகு நிர்வாகி’ என்று போற்றியுள்ளார். ராஷ்திரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிகார் துணை முதல்வர் சம்ராட் சௌத்ரி, பிகார் மாநில பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் உள்பட தலைவர்கள் பலரும் குணால் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பற்றி எரியும் இந்தோனேசியா... நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைப்பு! 3 பேர் பலி!

உ.பி.: மது அருந்திய 2 பேர் பலி, ஒருவர் கவலைக்கிடம்!

அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பையில் போலீஸாரின் விடுமுறைகள் ரத்து

லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் ரச்சிதா ராம்?

SCROLL FOR NEXT