முகப்பு
இந்தியா

ஜனநாயகத்தில் நீண்ட விளைவை ஏற்படுத்தும் தீர்ப்பு: பிரசாந்த் பூஷண்

ஜனநாயகத்தில் நீண்ட விளைவை ஏற்படுத்தக்கூடிய தீர்ப்பு என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.

Updated On : 15 பிப்ரவரி, 2024 at 7:26 AM
பிரசாந்த் பூஷண்
பகிர்:

தேர்தல் ஜனநாயகத்தில் நீண்ட விளைவை ஏற்படுத்தக்கூடிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கு தனி நபர் அல்லது நிறுவனங்கள், ரொக்கமாக அல்லது காசோலையாக நன்கொடை கொடுப்பதற்குப் பதிலாக, தேர்தல் நிதிப் பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-இல் அமல்படுத்தியது.

இந்த திட்டத்தின் கீழ் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெருமளவிலான நிதியை பாஜக பெற்றது. மொத்த தேர்தல் நிதிப் பத்திர நன்கொடையில் பாஜக மட்டும் 95 சதவிகிதம் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தல் நிதிப் பத்திர திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “தேர்தல் நிதிப் பத்திரம் என்பது சட்டவிரோதமானது, உடனடியாக இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறியதாவது:

“நமது தேர்தல் ஜனநாயகத்தில் நீண்டகாலம் விளைவை ஏற்படுத்தக்கூடிய தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பத்திர திட்டத்தையும், அதற்காக வருமான வரிச் சட்டம் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றத்தையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நிதிகளை யார் வழங்குகிறார்கள் என்பதை அறியும் குடிமக்களின் அடிப்படை உரிமையை இந்த திட்டம் மீறுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.” என்றார்.

மேலும், தேர்தல் நிதிப் பத்திர வழக்கின் மனுதாரரான ஜெயா தாகூர் கூறியதாவது:

“நன்கொடை குறித்த கேள்விகளை எழுப்ப தகவல் அறியும் உரிமைச் சட்டம் நமக்கு உரிமை வழங்கியுள்ளது. அதனை வெளியிடவில்லை என்றால் உரிமை மீறலாகும். இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. தேர்தல் பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முழுமையாக நிறைவேறியது.” எனத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →