ஞானவாபி மசூதி 
இந்தியா

ஞானவாபி மசூதியில் ஹிந்துக்கள் தொடர்ந்து வழிபடலாம்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

ஞானவாபி மசூதியில் ஹிந்துக்கள் தொடர்ந்து வழிபடலாம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

DIN

ஞானவாபி மசூதி விவகாரத்தில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஞானவாபி மசூதி வளாக தெற்கு பகுதியில் அமைந்துள்ள நிலவறையில் இடம்பெற்றிருக்கும் ஹிந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து, மசூதியில் அமைந்துள்ள நிலவறை கதவுகள் திறக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகின்றது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், கடந்த 13-ஆம் தேதி ஞானவாபி மசூதி வளாகத்தில் அமைந்துள்ள நிலவறையில் தரிசனம் செய்தார்.

ஹிந்துக்கள் நடத்தும் பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்து மசூதி நிர்வாகம் சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் இன்று காலை தீர்ப்பு வழங்கினார்.

அதில், வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, ஹிந்துக்கள் தொடர்ந்து பூஜை செய்யலாம் எனக் கூறி மசூதி நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.

வழக்கு கடந்து வந்த பாதை

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது.

முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், ஹிந்து கோயில் இடிக்கப்பட்டு, மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுவது குறித்து ஆய்வு நடத்த ஹிந்துக்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடா்பாக அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு கடந்த ஜூலையில் உத்தரவிட்டது. தொல்லியில் துறையின் ஆய்வறிக்கையின்படி, ‘மசூதி அமைந்துள்ள இடத்தில் முன்பு ஹிந்து கோயில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என்று ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ‘மசூதி நிா்வாகத்தால் அங்குள்ள நிலவறை கடந்த 1993-ஆம் ஆண்டு மூடப்படும் வரை, பூஜைகளை செய்துவந்த பூசாரி சோம்நாத் வியாஸின் குடும்பத்தினருக்கு மீண்டும் பூஜைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என வலியுறுத்தி சோம்நாத் வியாஸின் பேரனான சைலேந்திர குமாா் பதக் என்பவா் தரப்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்ற மாவட்ட நீதிபதி, நிலவறையில் பூஜை நடத்த அனுமதி அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT