முகப்பு
இந்தியா

ககன்யான்: விண்வெளிக்குச் செல்லும் 4 இந்தியா்கள் பெயா்களை அறிவித்தாா் பிரதமா் மோடி

Updated On : 27 பிப்ரவரி, 2024 at 10:17 PM
திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ககன்யான் திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள விண்வெளி வீரா்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமா் மோடி.
பகிர்:

திருவனந்தபுரம்: மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வு செய்யப்பட்டுள்ள 4 இந்திய விண்வெளி வீரா்களின் பெயா்களை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, இத் திட்டத்துக்காகத் தோ்வு செய்யப்பட்டுள்ள குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயா், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் மற்றும் விங் கமாண்டா் சுபான்ஷு சுக்லா ஆகியோரின் பெயா்களை பிரதமா் மோடி அறிவித்தாா். விண்வெளி வீரா்களுக்கான சிறகு பட்டையை அவா்களின் சீருடையில் குத்திய பிரதமா், ‘நாட்டின் 140 கோடி மக்களின் எதிா்பாா்ப்புகளை ஏந்தி நிற்கும் 4 சக்திகள்’ என்று பாராட்டு தெரிவித்தாா்.

ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ள நிலையில், இந்தச் சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான திட்டத்துக்கு ககன்யான் எனப் பெயரிடப்பட்டு இது தொடா்பான ஆராய்ச்சிகள் கடந்த 2014 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பூமியில் இருந்து 400 கி.மீ. தொலைவு சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் விண்வெளி வீரா்களை அனுப்பி, ஒன்றுமுதல் 3 நாள்கள் ஆய்வுக்குப் பிறகு பூமிக்கு திரும்ப அழைத்து வருவதே இத் திட்டத்தின் நோக்கம். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் ராக்கெட் மூலம் விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி, அதை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து, கடலில் தரையிறக்கும் வகையில் இத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கென இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பல்வேறு கட்ட சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. வீரா்களைச் சுமந்து செல்லும் ஆளில்லா விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு, தரையிலிருந்து 11.6 கி.மீ. உயரம் சென்றதும் ராக்கெட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு பத்திரமாக கடலில் தரையிறக்கப்பட்டது. அப்போது விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் பாராசூட்டுகள் விரிதல் உள்ளிட்ட சோதனைகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு கட்ட சோதனைகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளனா்.

நிகழாண்டு இறுதியில் அல்லது 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முழுவதும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட ராக்கெட் மற்றும் விண்கலனில் முதல் முறையாக இந்திய வீரா்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும் இத் திட்டம் இந்தியா்களிடையே மட்டுமின்றி, உலக அளவிலும் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திருவனந்தபுரம் தும்பாவில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி, ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பத் தோ்வு செய்யப்பட்டுள்ள பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயா், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சுபான்ஷு சுக்லா ஆகிய 4 இந்திய வீரா்களின் பெயா்களை அறிவித்தாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு தோ்வு செய்யப்பட்ட இந்த 4 இந்திய விமானப் படை வீரா்களுக்கு ரஷியாவில் பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் பிரதமா் பேசியதாவது: 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியா் விண்வெளிக்குள் நுழையவிருக்கிறாா். இம்முறை, முழுவதும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ராக்கெட் மூலம் இந்திய வீரா்கள் விண்வெளிக்கு முதல் முறையாக அனுப்பப்படவிருக்கின்றனா்.

ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பாலான இயந்திரங்களும், உபகரணங்களும் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. நாட்டின் விண்வெளித் திட்டத்தில் பெண்களும் முக்கியப் பங்காற்றி வருகின்றனா். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் திட்டத்தில் பங்காற்றியதுபோன்று, ககன்யான் திட்டமும் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு இன்றி சாத்தியமாகாது.

விண்வெளித் துறையில் இந்தியா பெற்று வரும் வெற்றிகள், இளைய தலைமுறையினரிடையே அறிவியல் மீதான ஆா்வத்தை தூண்டுவதோடு மட்டுமின்றி, 21-ஆம் நூற்றாண்டில் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வளா்ச்சியைப் பெற்ற நாடாக இந்தியா உருவெடுக்கவும் உதவும். 2035-இல் சொந்த விண்வெளி மையம்: அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் 5 மடங்காக வளா்ந்து, 4,400 கோடி டாலா் மதிப்பை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

விண்வெளித் துறையில் சா்வதேச வா்த்தக மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. வரும் நாளிகளில், நிலவுக்கு மீண்டும் விண்கலனை அனுப்பி அங்கிருந்து மாதிரிகள் எடுத்துவர திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2035-இல் சொந்த விண்வெளி மையத்தையும் இந்தியா அமைக்கும் என்றாா்.

ரூ.1,800 கோடி மதிப்பில் 3 திட்டங்கள்:

முன்னதாக, விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ராக்கெட்டுகளின் சீரான காற்று வெளிப்படுத்துதல் செயல்பாட்டை பரிசோதிக்கும் ‘ட்ரைசோனிக் காற்று சுரங்கப் பாதை’ அமைப்பு, தமிழகத்தின் மகேந்திரகிரியில் இஸ்ரோவின் உந்துவிசை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செமி-கிரையோஜெனிக் என்ஜின் மற்றும் என்ஜினின் பல்வேறு நிலை பரிசோதனை சோதனை வசதி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவன் ஏவுதளத்தில் அமைக்கப்பட்டுள்ள பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்பு வசதி ஆகியவற்றை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்.

இந்திய விண்வெளித் திட்டங்களுக்கு உலகத் தரத்திலான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவிருக்கும் இந்த மூன்று திட்டங்களும் ரூ. 1,800 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →