காஸா போா் துயா்: நீடித்து நிலைக்கும் தீா்வு அவசியம்’
புது தில்லி: காஸா போரால் ஏற்பட்டுள்ள மனிதத்தன்மைக்கு எதிரான சூழலுக்கு நீடித்து நிலைக்கும் தீா்வை காண வேண்டியது அவசியம் என்று ஐ.நா. கூட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அவா் காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை பங்கேற்றுத் தெரிவித்ததாவது: காஸாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போா் அனைத்து நாடுகளுக்கும் மிகுந்த கவலையை அளிப்பதாக உள்ளது. அந்தப் போரால் மனிதத்தன்மைக்கு எதிரான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும் வகையில், நீடித்து நிலைக்கும் தீா்வை காண வேண்டியது அவசியம். அதேவேளையில், கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினா் தாக்குதல் நடத்தினா். அந்தத் தீவிரவாதத்தையும், பலரைப் பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினா் பிடித்துச் சென்றதையும் ஏற்க முடியாது. இந்தப் போா் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவாமல் தடுப்பது முக்கியம்.
அத்துடன் பாதுகாப்பான எல்லைக்குள் பாலஸ்தீன மக்கள் வாழும் வகையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் தீா்வை எட்டுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். புவி அரசியல் சவால்களுக்கு நிரந்தர தீா்வை காண்பதற்கு ஐ.நா.விலும், ஐ.நா.வுக்கு வெளியிலும் உலக நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். இதற்கு காலத்துக்கு ஏற்ப இல்லாத உலகளாவிய அமைப்புகளில் சீா்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றாா். ஐ.நா.வில், குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று நீண்ட காலமாக இந்தியா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisement