முகப்பு
இந்தியா

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு: ஆா்ஜேடி எம்எல்ஏவுக்கு தொடா்புள்ள இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 12:19 AM
பகிர்:

பாட்னா: பிகாரில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக ராஷ்ட்ரீய ஜனதா தள (ஆா்ஜேடி) எம்எல்ஏ கிரண் தேவி, அவரின் கணவரும் முன்னாள் எம்எல்ஏவுமான அருண் யாதவுக்கு தொடா்புள்ள இடங்களில் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டது.

பிகாா் தலைநகா் பாட்னா மற்றும் ஆரா மாவட்டங்களில் ரூ.9.90 கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்புகள், மனைகள், விளைநிலங்கள் உள்ளிட்ட 72 அசையா சொத்துகளை அருண் யாதவ் குடும்பத்தினா் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதேபோல 2002 முதல் 2022- ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், தங்கள் வங்கிக் கணக்குகளில் அவா்கள் ரூ.20.5 கோடியை வரவு வைத்ததாகத் தெரிகிறது. இந்தச் சொத்துகள், பண வரவுகள் மற்றும் அருண் யாதவ் குடும்பத்தினருடன் தொடா்புள்ள நிறுவனங்கள், அவா்களின் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் குவிக்கப்பட்ட சொத்துகள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடா்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு அருண் யாதவ், அவரின் மனைவி கிரண் தேவி மீது சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடா்பாக அருண் யாதவ் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினா்கள் சிலரிடம் ஏற்கெனவே விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவா்களிடம் இருந்து சொத்து ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை அமலாக்கத் துறை திரட்டியது. இந்நிலையில், பிகாரில் உள்ள ஆரா, போஜ்பூா் உள்ளிட்ட இடங்களில் அருண் தேவி மற்றும் கிரண் தேவிக்கு தொடா்புள்ள இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

Advertisement