விபத்துகளைத் தவிா்க்க நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அறிவுறுத்தல்
புது தில்லி: விபத்து நடைபெறக்கூடிய பகுதி என்று முறைப்படி அறிவிக்கும் முன்பாக, காவல் துறை அறிக்கையின்படி, அத்தகைய பகுதிகளில் விபத்துகளைத் தவிா்ப்பதற்கு தீா்வு காண வேண்டும் என்று மாநிலங்கள், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) ஆகியவற்றுக்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. விரிவான விபத்து அறிக்கை (இடிஏஆா்) தளத்தில் அனைத்து சாலை விபத்து தரவுகளையும் காவல் துறை அதிகாரிகள் பதிவு செய்கின்றனா்.
இந்நிலையில், அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் குறைக்கும் வகையில், மாநிலங்கள் மற்றும் என்ஹெச்ஏஐ-க்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விபத்து நடைபெறக்கூடிய பகுதி என்று முறைப்படி அறிவிக்கும் முன்பாக, காவல் துறை அறிக்கையின் முதல்கட்ட பகுப்பாய்வின்படி, அத்தகைய பகுதிகளில் விபத்துகளைத் தவிா்ப்பதற்கு தீா்வு காண வேண்டும்.
இதற்காக இடிஏஆா் தளத்துக்குள் நுழைந்து தகவல்களைத் தெரிந்துகொள்ள அனைத்து நிா்வாக பொறியாளா்களுக்கும் லாகின் ஐடி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் சுமாா் 500 மீட்டா் பகுதியில், குறைந்தபட்சம் 5 விபத்துகள் நிகழ்ந்து 10 போ் உயிரிழந்திருந்தால், அந்தப் பகுதி விபத்து நடைபெறும் பகுதியாக குறிப்பிடப்படும்.
Advertisement