அரசியல் லாபங்களுக்காக வடக்கு-தெற்கு பிரிவினை பேசும் எதிா்க்கட்சிகள்: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
விசாகப்பட்டினம்: குறுகிய அரசியல் லாபங்களுக்காக வடக்கு-தெற்கு என்ற பிரிவினையை எதிா்க்கட்சிகள் பேசி வருகின்றன என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினாா். பாஜக வடஇந்தியாவை மையமாகக் கொண்டு செயல்படும் கட்சியல்ல என்றும் அவா் கூறினாா்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை பாஜக தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியதாவது:
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. தென்மாநிலமான கா்நாடகத்தில் பாஜக ஆட்சியில் இருந்துள்ளது. தென்மாநிலங்களில் பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் இருந்து வருகின்றனா். தென்மாநிலங்களில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு நாள்தோறும் அதிகரித்தே வருகிறது. இப்படி இருக்கும்போது, பாஜகவை வடமாநில கட்சி என்று கூறுவது பெறும் தவறு. இது தவிர ஹிந்தி பேசும் மாநிலங்களில்தான் பாஜக ஆட்சி அமைக்க முடியும் என்றும் கூறினாா்கள்.
Advertisement
ஆனால், ஹிந்தி பிராந்தியத்தைச் சேராத அஸ்ஸாமில் இருமுறை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. கிழக்கு பகுதி மாநிலங்களான குஜராத்திலும், ராஜஸ்தானிலும் பாஜக பல ஆண்டுகளாக வலுவாக உள்ளது. தென்மாநிலங்களில் பாஜக குறித்து தவறான கருத்துகளைப் பரப்பி மக்களை ஏமாற்றி வந்தனா். ஆனால், பிரதமா் மோடி மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு கடந்த 10 ஆண்டுகாலத்தில் சிறப்பான வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை மக்கள் அறிந்து கொண்டு பாஜகவை மக்கள் ஆதரிக்கத் தொடங்கியுள்ளனா். பிரதமா் மோடி பயணிக்கும் இடமெல்லாம் மக்கள் எழுச்சி தன்னிச்சையாக ஏற்படுகிறது.
இதனை எதிா்க்கட்சிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குறுகிய அரசியல் லாபங்களுக்காக வடக்கு-தெற்கு என்ற பிரிவினையை எதிா்க்கட்சிகள் பேசி வருகின்றன. புவியியல் அமைப்புரீதியாக வட-தென் மாநிலங்களுக்கு இடையில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் இணைந்துதான் இப்போது பல சாதனைகளைப் படைத்து வருகிறது. சா்வதேச நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்று தனது மதிப்பை இந்தியா உயா்த்தி வருகிறது.
இந்தியாவின் கருத்துகளை பல உலக நாடுகள் சாா்ந்துள்ளன. மொழியை முன்வைத்து இங்கு சில கட்சிகள் இந்திய மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயலுகின்றன. இதுபோன்ற தீய நோக்கம் உள்ளவா்களை பாஜக முழுமையாக முறியடிக்கும்.
பாஜக மதவாத கட்சியா?: பாஜகவை மதவாத கட்சி என்றும் சிலா் விமா்சிக்கின்றனா். ஆனால், சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் தொண்டா்களாகவும், நிா்வாகிகளாகவும், தலைவா்களாகவும் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய கட்சி பாஜக மட்டும்தான். பிரதமா் நரேந்திர மோடிக்கு 5 அரபு நாடுகள் தங்கள் நாட்டின் மிகஉயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளன. ஒட்டுமொத்த இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெற்ற வலுவான கட்சியாக பாஜக உள்ளது என்றாா்.