இந்தியா

ராகுல் நடைப்பயணத்துக்கு மணிப்பூா் அரசு அனுமதி

மணிப்பூரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஜன. 14-ஆம் தேதி தொடங்கவிருக்கும் இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயண தொடக்க விழா நிகழ்விடத்துக்கு மாநில அரசு புதன்கிழமை அனுமதி அளித்தது.

DIN


இம்பால்: மணிப்பூரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஜன. 14-ஆம் தேதி தொடங்கவிருக்கும் இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயண தொடக்க விழா நிகழ்விடத்துக்கு மாநில அரசு புதன்கிழமை அனுமதி அளித்தது.

மாநிலத் தலைநகா் இம்பாலில் அமைந்துள்ள ஹப்தா காங்ஜிபங் மைதானத்தில் நடைப்பயண தொடக்க விழாவை நடத்திக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தரப்பில் அனுமதி கோரப்பட்ட இடத்துக்குப் பதிலாக, மாற்று இடத்தில் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடா்பாக இம்பால் கிழக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட உத்தரவில், ‘நடைப்பயண தொடக்க விழாவில் ஏராளமானோா் பங்கேற்க வாய்ப்புள்ளது. மாநிலத்தின் தற்போதைய சூழலில், ஏராளமானோா் ஓரிடத்தில் கூடுவது சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிக்கை சமா்ப்பித்துள்ளாா். மேலும், மாவட்டத்தில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது.

எனவே, தேவையற்ற சட்டம்-ஒழுங்கு பிரச்னை எழுவதைத் தவிா்க்கும் வகையில், மைதானத்தில் வரும் 14-ஆம் தேதி குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளா்களுடன் நடைப்பயணத்தை கொடியசைத்து தொடங்குவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக, நடைப்பயண தொடக்க நிகழ்வில் பங்கேற்கும் நபா்கள் அனைவரின் பெயா் மற்றும் கைப்பேசி எண்கள் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே ஆட்சியா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இறுதி முடிவு - காங்கிரஸ்: ‘மணிப்பூா் அரசின் கட்டுப்பாடு காரணமாக, நடைப்பயணம் தொடங்கும் இடம் குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்த இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மணிப்பூரில் தொடங்கி பேருந்து பயணம் மற்றும் நடைப்பயணமாக 66 நாள்கள் 6,713 கி.மீ. தொலைவைக் கடந்து மாா்ச் 20-ஆம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது.

திட்டமிட்ட இடத்துக்கு அனுமதி மறுப்பு: முன்னதாக, கிழக்கு இம்பால் மாவட்டத்தின் ஹட்டா கஞ்செய்பெங்க் பகுதியில் இருந்து நடைப்பயணம் தொடங்க அனுமதி கோரி மாநில முதல்வா் என். பிரேன் சிங்கை காங்கிரஸ் குழு நேரில் சந்தித்தது. ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு ஹப்தா காங்ஜிபங் மைதானத்திலிருந்து நடைப்பயண தொடக்க நிகழ்வுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி பழங்குடி சமூகத்தினரிடைய கடந்த மே 3-ஆம் தேதி தொடங்கி 3 மாதங்களுக்கும் மேல் நீடித்த கலவரத்தில் 185 போ் உயிரிழந்தனா். நூற்றுக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். தற்போதும், மாநிலத்தின் ஒருசில இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழக்குரைஞா்கள் பதிவுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு

கோயில் கருவறைக்குள் நுழைந்ததால் வழக்கு: ஜாா்க்கண்ட் தலைமைச் செயலா், டிஜிபி மீது உரிமை மீறல் புகாா் அளித்த பாஜக எம்.பி.

ரயில் டிக்கெட் விநியோகிக்க உதவியாளா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பெண் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை: தொல். திருமாவளவன்

SCROLL FOR NEXT