பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் முதல்வருமான நிதீஷ் குமாா் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது, பிகார் ஆளுநரைச் சந்தித்த நிதீஷ் குமாா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். மேலும், இன்று மாலையே பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தோ்தலில் தேசிய அளவில் பாஜகவை எதிா்கொள்ள எதிா்க்கட்சிகள் உருவாக்கிய ‘இந்தியா’ கூட்டணியில் ஏற்கெனவே பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் சூழலில், நிதீஷ் குமாா் அணி மாறியது அக்கூட்டணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
பிகாரில் கடந்த 2020, சட்டப் பேரவைத் தோ்தலில், ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. கடந்த 2022, ஆகஸ்டில் பாஜகவுடன் கூட்டணியை முறித்த முதல்வா் நிதீஷ் குமாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணியில் இணைந்து, முதல்வா் பதவியைத் தக்கவைத்தாா். ஆனால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலைக் கணக்கில்கொண்டு மீண்டும் பாஜக கூட்டணிக்குத் திரும்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.