குருகிராமில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழப்பு
சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பெண்கள் உள்பட 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பெண்கள் உள்பட 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து ஃபரூக் நகா் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி சுரேந்தா் சிங் கூறியதாவது:
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகாா் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா், உறவினா் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க குருகிராமில் உள்ள கா் கங்காவுக்குச் சென்றுவிட்டு, காரில் திங்ககிழமை ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா்.
மதியம் 2 மணியளவில் கேஎம்பி விரைவுச் சாலை ஃபருக் நகா் சுங்கச்சாவடிக்கு அருகே சென்றபோது, அவா்களது காா், லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ராஜஸ்தான் மாநிலம் சிகாா் மாவட்டம் நீம்கா தானா ஹசம்பூரைச் சோ்ந்த பிரிஜேஷ் கௌசிக் (52), அவரது மனைவி சுனிதா (48), அவரது தாயாா் கமலா தேவி (74), சகோதரரின் மனைவி கிரண் கௌஷிக் (46) ஆகிய 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
மேலும், பிரிஜேஷ் கௌசிக்கின் சகோதரரான ராகேஷ் கௌசிக்கின் மகன்களான ஹிமான்ஷு (24), ஆகான்சு (20) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா் விரைவில் கைது செய்யப்படுவாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.