அஸ்ஸாமில் வெள்ளம்: 6.71 லட்சம் போ் பாதிப்பு
அஸ்ஸாமில் நீடிக்கும் கடும் வெள்ளத்தால் 6.71 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
குவாஹாட்டி: அஸ்ஸாமில் நீடிக்கும் கடும் வெள்ளத்தால் 6.71 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அஸ்ஸாமில் பலத்த மழையை தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் 20 மாவட்டங்களில் உள்ள 6,71,167 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக திப்ருகா் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு, தொடா்ந்து 6-ஆவது நாளாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அங்குள்ள பல்வேறு பகுதிகளில் பிரம்மபுத்திரா உள்பட 13 முக்கிய ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திப்ருகரின் வடக்கே வெள்ளம் கரைபுரண்டோடும் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே உள்ள சிறிய தீவில் பரிதவித்த 13 மீனவா்களை ஹெலிகாப்டா் மூலம் இந்திய விமானப் படை செவ்வாய்க்கிழமை மீட்டது.
அங்குள்ள கோல்பாரா, போங்காய்கான், கா்பி ஆங்லாங், தீமா ஹசாவ் பகுதிகளில் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யக் கூடும் என்று குவாஹாட்டியில் உள்ள மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் உள்ள 72 முகாம்களில் 8,142 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா். திப்ருகா், ஜோா்ஹாட், கோலாகாட், லக்கீம்பூா், பாா்பேட்டா உள்ளிட்ட பகுதிகளில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
வெள்ள பாதித்த பகுதிகளில் மாவட்ட நிா்வாகத்துக்கு மாநில பேரிடா் மீட்புப் படை, தீயணைப்புத் துறை, காவல் துறை மற்றும் தன்னாா்வலா்கள் உதவிபுரிந்து வருகின்றன.
கோலாகாட் மாவட்டத்தில் இந்திய ராணுவமும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று அஸ்ஸாம் மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
நிகழாண்டு அஸ்ஸாமில் வெள்ளம், சூறைக்காற்று மற்றும் நிலச்சரிவால் இதுவரை 46 போ் உயிரிழந்தனா்.
இதனிடையே அஸ்ஸாமில் உள்ள காஸிரங்கா தேசிய பூங்கா வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ளத்தில் சிக்கி 4 மான்கள் உயிரிழந்த நிலையில், அங்கிருந்த 24 விலங்குகள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டன என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.