முகப்பு
இந்தியா

நீட் தேர்வு: தமிழகத்துக்கு விலக்கு அளியுங்கள்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு: மாநிலங்களவில் திமுக வலியுறுத்தல்

Updated On : 2 ஜூலை, 2024 at 11:03 PM
பகிர்:

நமது சிறப்பு நிருபர்

புது தில்லி: மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான "நீட்' தேர்வை நாடு முழுக்க ரத்து செய்யுங்கள் அல்லது தமிழக மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து நீட் தேர்விலிருந்து விலக்கு அளியுங்கள் என திமுக உறுப்பினர்கள் திருச்சி சிவா, பி.வில்சன், டாக்டர் கனிமொழி என்விஎன் சோமு ஆகியோர் மாநிலங்களவையில் குறிப்பிட்டனர்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மாநிலங்களவையில் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் நடைபெற்றது. இதில் மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா, திமுக உறுப்பினர் பி.வில்சன் ஆகியோர் நீட் விவகாரம் குறித்துப் பேசுகையில், "நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் தமிழக மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மசோதா 2021}ஐ தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இந்த மசோதா மத்திய அரசின் (குடியரசுத் தலைவர்) ஒப்புதலுக்காக 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் போதுமான சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு தமிழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முன்வர வேண்டும்.

"நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தமிழக அரசின் 'நீட்' தேர்வு விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டனர்.

மாநிலங்களவை திமுக உறுப்பினர் பி.வில்சன் மேலும் கூறுகையில், "நீட்' என்பது தகுதிக்கான தேர்வாக இருப்பதற்குப் பதிலாக, மோசடிகளுக்கும் ஊழலுக்குமாக மாறியுள்ளது. இந்த தேர்வு வினாத்தாள்களை வீடுகளில் இருந்து ஒரு தொலைபேசி அல்லது மின்னணு வர்த்தகத்தில் வாங்கப்படும் சூழ்நிலைக்கு போய் உள்ளது.

கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் இளநிலை தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஜூன் 23}ஆம் தேதி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாமதத்தால் ஆவணங்களை சிதைக்கவும் ஆதாரங்களை அழிக்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 9 }ஆம் தேதி தேர்வு முறைகேடுகளை தடுக்கும்விதமாக பொதுத் தேர்வு (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுக்கும்) மசோதா 2024 நிறைவேற்றப்பட்டது. அடுத்த சில நாள்களில் குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்தார். இருப்பினும், இந்த மசோதா கடந்த ஜூன் 21 ஆம் தேதிதான் சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாமதத்தால் தற்போது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ள வழக்குகளில் (10 ஆண்டுகள் வரை சிறை) இந்த புதிய சட்டத்தின்படி தண்டனை பெற்றுத் தரமுடியுமா எனக் கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் "நீட்' தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்ஐஏ) முறையாக நாடாளுமன்றச் சட்டத்தின்படி வரன்முறைப்படுத்தாத நிறுவனமாக இருக்கிறது. சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் என்ஐஏ உருவாக்கப்பட்டிருப்பதால் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலைக் கேட்டுப் பெற முடியாது' என்றார்.

திமுக உறுப்பினர் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு பேசுகையில், "குடியரசுத் தலைவர் உரையில், நீட் வினாத்தாள் கசிவை சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்டு,"கடந்த காலங்களிலும் இப்படி நடந்திருக்கிறது' எனக் குறிப்பிடப்படுகிறது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல, அவர்களின் கல்விக்காக ஒட்டுமொத்த குடும்பத்தினரின் உழைப்பும் இதில் அடங்கியிருக்கிறது' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →