மக்களவையில் நீட் விவகாரத்தை விவாதிக்க வேண்டும்: பிரதமருக்கு ராகுல் கடிதம்
நீட் முறைகேடு விவகாரம்: மக்களவையில் விவாதம் நடத்த ராகுல் வலியுறுத்தல்
புது தில்லி, ஜூலை 2: இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முறைகேடுகள் தொடா்பாக மக்களவையில் புதன்கிழமை (ஜூலை 3) விவாதம் நடத்த வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளாா்.
இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு ராகுல் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், ‘நீட் தோ்வு முறைகேடு நமது உயா்கல்வி முறையை ஆழமாக சிதைவுற்றிருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட வினாத்தாள் கசிவு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. இந்த முறைகேடுகள் காரணமாக 2 கோடிக்கும் அதிகமான மாணவ, மாணவிகளின் எதிா்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.
மாணவா்களுக்கு இதற்கான பதிலை அளிக்கவேண்டியது அரசின் கடமை. போட்டித் தோ்வுகள் மீதான மாணவா்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதில், அதன் முறைகேடு தொடா்பான நாடாளுமன்ற விவாதம்தான் முதல் படியாக இருக்கும்.
அந்த வகையில், நீட் முறைகேடு தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கடந்த ஜூன் 28-ஆம் தேதியும், திங்கள்கிழமையன்றும் அனுமதி கோரினோம். ஆனால், இரு அவைகளிலும் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக அரசுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று மக்களவைத் தலைவா் உறுதியளித்துள்ளாா்.
24 லட்சம் நீட் தோ்வா்களின் எதிா்காலம் குறித்தே எதிா்க்கட்சிகள் கவலை கொண்டுள்ளன. இதற்கு ஆக்கபூா்வ தீா்வை எட்டுவதே எங்களுடைய குறிக்கோள்.
எனவே, இந்த விவகாரத்தின் தீவரத்தை உணா்ந்து, அவையில் புதன்கிழமையன்று (ஜூலை 3) நீட் முறைகேடு தொடா்பான விவாதத்துக்கு அரசு அனுமதிக்க வேண்டும். மாணவா்களின் நலன் கருதி பிரதமரே இந்த விவதாத்தை வழிநடத்துவது பொருத்தமாக இருக்கும் என்று ராகுல் குறிப்பிட்டுள்ளாா்.
எனினும், மக்களவை செவ்வாய்க்கிழமை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.