முகப்பு
இந்தியா

ஆன்மிக நிகழ்ச்சியில் நெரிசல்: 116 போ் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 108 பெண்கள், 7 குழந்தைகள், ஒரு ஆண் என 116 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 3 ஜூலை, 2024 at 4:16 AM
பேருந்தின் இருக்கையில் கிடத்தப்பட்டுள்ள, நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள்.
பகிர்:
Updated On : 3 ஜூலை, 2024 at 4:15 AM

ஹாத்ரஸ்: உத்தர பிரதேசத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 108 பெண்கள், 7 குழந்தைகள், ஒரு ஆண் என 116 பேர் உயிரிழந்தனர்.

இவர்களில் 72 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மாநில தலைமைச் செயலர் மனோஜ் குமார் சிங் தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில், "போலே பாபா' என்ற ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தனியார் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement

மாலையில் நிகழ்ச்சி முடிந்து, மைதானத்தைவிட்டு மக்கள் கிளம்பும்போது கடும் நெரிசல் ஏற்பட்டது. "போலே பாபா'விடம் ஆசி பெறவும், அவரது காலடி மண்ணை சேகரிக்கவும் மக்கள் முண்டியடித்தபோது நெரிசல் ஏற்பட்டு, ஒருவர் மீது மற்றொருவர் விழுந்தனர். மைதானம் வழுக்கும் தன்மையுடன் இருந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு அளவுக்கு அதிகமான கூட்டம் கூடிய நிலையில், போதிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, லாரிகள் மற்றும் பிற கனரக வாகனங்களில் சிக்கந்தர ராவ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒரேயொரு மருத்துவர் மட்டுமே பணியில் இருந்ததாகவும், ஆக்சிஜன் வசதியும் இல்லை எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

மருத்துவமனையில் பிணக் குவியல்: சிக்கந்தர ராவ் பகுதி மருத்துவமனை முழுவதும் பிணக் குவியலாக காணப்பட்டது. வாகனங்களில் சடலங்களும், காயமடைந்தவர்களும் ஏற்றிச் செல்லப்படும் காட்சிகள், சமூக ஊடகங்களில் பரவின.

விசாரணைக் குழு: சொற்பொழிவு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஆக்ரா சரக கூடுதல் காவல் துறை இயக்குநர், அலிகார் கோட்ட காவல் ஆணையர் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு ரூ.2 லட்சம் நிவாரணம்: நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 மாநில அரசு சார்பில் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

குடியரசுத் தலைவர் இரங்கல்: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ஹாத்ரஸ் சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் உயிரிழந்த செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' என்றார்.

பிரதமர் நிவாரண நிதி அறிவிப்பு: மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய பிரதமர் மோடி, ஹாத்ரஸ் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் வலியுறுத்தல்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே "எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், "உத்தர பிரதேசத்தில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்படுவதையும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதையும் அரசு நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுமாறு காங்கிரஸ் தொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் நடந்த விபத்துகள்...

நாட்டின் மத வழிபாட்டுத் தலங்களில் அல்லது மத நிகழ்ச்சிகளில் சமீபத்திய ஆண்டுகளில் நடந்த பெரிய விபத்துகள் விவரம்:

அக். 13, 2013: மத்திய பிரதேசத்தில் உள்ள ரத்தன்கர் கோயிலில் நவராத்திரி விழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் உயிரிழந்தனர்.

ஜன. 14, 2011: கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் ஊர்வலம் சென்ற பக்தர்கள் மீது ஜீப் மோதியதில் ஏற்பட்ட நெரிசலில் 104 சபரிமலை பக்தர்கள் உயிரிழந்தனர்.

மார்ச் 4, 2010: உத்தர பிரதேசம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கோயிலில் விநியோகிக்கப்பட்ட இலவச ஆடைகள் மற்றும் உணவுகளை வாங்க மக்கள் கூடியிருந்தபோது ஏற்பட்ட நெரிசலில் 63 பேர் உயிரிழந்தனர்.

செப். 30, 2008: ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரிலுள்ள சாமுண்டா தேவி கோயிலில் குண்டுவெடிப்பு நடந்ததாக வதந்தி பரவியதால் ஏற்பட்ட நெரிசலில் 250 பக்தர்கள் உயிரிழந்தனர்.

ஆக. 3, 2008: ஹிமாசல பிரதேசத்தில் உள்ள நைனா தேவி கோயிலில் பாறைகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட நெரிசலில் 162 பேர் உயிரிழந்தனர்.

ஜன. 25, 2005: மகாராஷ்டிரத்தில் உள்ள மந்தர்தேவி கோயிலில் ஆண்டு யாத்திரையின்போது 340-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

நிகழ்ச்சியை நடத்தியது யார்?

கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிகழ்ச்சியை நடத்தியவர் சூரஜ்பால் எனும் "போலே பாபா' என்பவராவார். 1990-இல் காவலர் பணியை ராஜிநாமா செய்துவிட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட்டு சொற்பொழிவாளராக மாறினார்.

ஏழை, சமுதாயத்தில் பின்தங்கியவர்கள் என லட்சக் கணக்கான பக்தர்கள் அவருக்கு உள்ளனர். மனைவியுடன் இணைந்து அவர் ஆன்மிக சொற்பொழிவில் ஈடுபடுவது வழக்கம். சொந்த பாதுகாவலர்கள் மூலம் அவரது நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.