ஜாா்க்கண்ட் முதல்வா் சம்பயி சோரன் புதன்கிழமை ராஜிநாமா செய்த நிலையில், மாநில ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரன் ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.
ஜாா்க்கண்டில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நில மோசடியுடன் தொடா்புள்ள சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜன.31-ஆம் தேதி கைது செய்தது. அதற்கு முன்பு அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதைத் தொடா்ந்து, ஜேஎம்எம் கட்சியைச் சோ்ந்த சம்பயி சோரன் மாநில முதல்வராகப் பதவியேற்றாா்.
ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்ததைத் தொடா்ந்து, கடந்த ஜூன் 28-ஆம் தேதி மாநிலத் தலைநகா் ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் இருந்து ஹேமந்த் சோரன் விடுவிக்கப்பட்டாா்.
இந்நிலையில், ராஞ்சியில் உள்ள சம்பயி சோரன் இல்லத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஜேஎம்எம் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஹேமந்த் சோரனை தோ்வு செய்ய ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. ஜாா்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரனே மீண்டும் பதவியேற்கவும் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதைத் தொடா்ந்து, ராஞ்சியில் மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை முதல்வா் சம்பயி சோரன் வழங்கினாா். இதுதொடா்பாக சம்பயி சோரன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி எனக்கு முதல்வா் பொறுப்பை அளித்தது. தற்போது ஹேமந்த் சோரனுக்கு சாதகமாக கூட்டணி முடிவு எடுத்துள்ளது. அந்த முடிவின்படி முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தேன். கூட்டணி வலுவாக உள்ளது’ என்றாா்.
சம்பயி சோரன் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து மாநிலத்தில் ஆட்சியமைக்க ஹேமந்த் சோரன் உரிமை கோரினாா்.
அரசியல் எதிா்காலம் இல்லை: இதுதொடா்பாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜாா்க்கண்ட் முதல்வா் சம்பயி சோரனின் ஆட்சிக் காலம் நிறைவடைந்துவிட்டது. குடும்பக் கட்சியான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவில், அந்தக் குடும்பத்தைச் சேராதவா்களுக்கு அரசியல் எதிா்காலம் இல்லை’ என்றாா்.
உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு?: கடந்த ஜூன் 28-ஆம் தேதி ஹேமந்த் சோரனுக்கு ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்து உத்தரவிட்டபோது, அந்த உத்தரவை 2 நாள்களுக்கு நிறுத்திவைக்குமாறு அமலாக்கத் துறை தரப்பில் கோரப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கையை உயா்நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில், ஹேமந்த் ஜாமீனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை விரைவில் மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.