விண்வெளி செல்வதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு ககன்யான் திட்டம் குறித்து சமீபத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
அந்தப் பேட்டியில், ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அனுப்புவீர்களா என்று சோம்நாத்திடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த சோம்நாத், பிரதமரை விண்வெளிக்கு அனுப்புவதில் எங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை என்று தெரிவித்திருந்தார்.
மேலும், ககன்யான் திட்டத்தின் பாதுகாப்புத் தன்மை ஆராய்ந்து உறுதி செய்யப்பட்ட பிறகே முக்கிய பிரமுகர்களை இந்த திட்டத்தில் விண்வெளிக்கு அழைத்துச் செல்ல முடியும் என்று சோம்நாத் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், இதுதொடர்பான செய்தியை மேற்கோள்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், “விண்வெளிக்கு செல்லும் முன், 'நான் - பயலாஜிகல்’ பிரதமர் மணிப்பூருக்கு செல்ல வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
ககன்யான் திட்டத்தின் முதல் பயணம் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், முதல் பயணத்தை மேற்கொள்ளவுள்ள குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகிய நான்கு பேரையும் பிரதமர் மோடி சில மாதங்களுக்கு முன்பு நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.