பருப்பு, காய்கறி இல்லை... பள்ளி மதிய உணவாக வெறும் மஞ்சள் சோறு!
மதிய உணவில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து அற்ற வெறும் மஞ்சள் சோறு மட்டுமே வழங்கப்படுகிறது.
சத்தீஸ்கரில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்தற்ற மதிய உணவு வழங்கப்படுகிறது.
மதிய உணவில் பருப்பு, காய்கறிகள் இல்லாமல், வெறும் மஞ்சள் சோறு மட்டுமே வழங்கப்படுகிறது. இது தொடர்பான விடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
சில மாநிலங்களில் மாணவர்களுக்கு சப்பாத்தியுடன் வெறும் உப்பு மட்டுமே வழங்கப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது சத்தீஸ்கரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மஞ்சள் பொடி கலந்த சோறு மட்டுமே வழங்கப்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கல்வி பயிலும் மாணவர்கள் நலனுக்காக, ஊட்டச்சத்துள்ள உணவை வழங்க வேண்டும் என கோடிக்கணக்கான ரூபாய்களை மாநில அரசு ஒதுக்கீடு செய்த நிலையில் கூட, பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற, ஊட்டச்சத்து அற்ற உணவு மட்டுமே வழங்கப்படும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்திலுள்ள பிஜகுரா பகுதியில் செயல்பட்டுவரும் அரசுப் பள்ளியில் பயிலும் 43 மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில், வெறும் மஞ்சள் மட்டுமே சேர்க்கப்படுகிறது. பருப்பு, காய்கறிகள் இல்லாமல், மஞ்சளுடன் உப்பு சேர்த்து மதிய உணவு பரிமாறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக இவ்வாறானே மதிய உணவே வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பள்ளியில் போதிய அளவிலான காய்கறிகள் விநியோகம் செய்யப்படாததே, வெறும் மஞ்சள் சோறு வழங்குவதற்கு காரணம் எனக் கூறுகிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர்.
நிலுவைத் தொகையை வழங்காததால், பள்ளிக்கு காய்கறி விநியோகம் செய்வதை நிறுத்தியதாக கூறுகிறார் ஒப்பந்ததாரர். இவர்களின் பொறுப்பை தட்டிக்கழிக்கும் காரணங்களால், பாதிக்கப்படுவது அரசுப் பள்ளி மாணவர்களாகவே உள்ளனர். இதன் விளைவாக பள்ளி மாணவர்களுக்கு அரசு வகுத்துக்கொடுத்த அட்டவணைப்படியும் உணவு வழங்கப்படுவதில்லை எனக் கூறுகின்றனர் அப்பள்ளி ஆசிரியர்கள்.
இது தொடர்பாக ஆங்கில செய்தி ஊடகத்துக்கு பேட்டி அளித்த மாவட்ட கல்வி அதிகாரி தேவேந்திர நாத் மிஸ்ரா, மாணவர்களுக்கு ஊட்டச்சத்தற்ற உணவு வழங்கப்படுவது இப்போதுதான் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தி சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உணவு சமைக்கும் சுகியா தேவி பேசுகையில், எங்களுக்கு காய்கறி, மளிகை பொருள்கள் வரவில்லையென்றால், எங்களால் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு உணவளிக்க முடியாது. சில நேரங்களில் பருப்பும், சோறும் மட்டுமே உள்ளது. சில நேரங்களில் பருப்பும் இல்லாததால், மஞ்சளுடன் உப்பு கலந்த உணவை அளிக்கிறோம். காய்கறிகள் கேட்டால், இருப்பு இல்லை என பதிலளிக்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.