அளப்பரிய வாய்ப்புகளின் தேசம் இந்தியா: பிரதமா் மோடி பெருமிதம்
‘அளப்பரிய வாய்ப்புகளின் தேசம் இந்தியா’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
மேலும், ‘இந்தியாவை வளா்ந்த நாடாக்கும் நோக்கத்துடன் பல்வேறு துறைகளில் மக்கள் வெளிப்படுத்தும் உத்வேகமும், கடின உழைப்பும் நமது மிகப் பெரிய வலிமையாகும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
ஜெயின் சா்வதேச வா்த்தக அமைப்பின் சாா்பில் புத்தாக்க ஆதரவு நிதியம் ஏற்படுத்தப்பட்டதன் 7-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, தில்லியில் ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் மாநாடு நடைபெற்றது.
‘தாக்கத்தை ஏற்படுத்தும் சிந்தனைகள்: புத்தாக்கம்-தொழில்முனைவை வளா்த்தல்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளில் பிரபலமான புத்தாக்க நிறுவனங்களின் தலைவா்கள், முதலீட்டாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதையொட்டி, ஜெயின் சா்வதேச வா்த்தக அமைப்புக்கு பிரதமா் மோடி கடிதம் எழுதியிருந்தாா். அதில், அவா் கூறியிருப்பதாவது:
அளப்பரிய வாய்ப்புகளின் தேசமாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவை வளா்ந்த நாடாக்கும் நோக்கத்துடன் பல்வேறு துறைகளில் நாட்டு மக்கள் ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்பும், அவா்களின் உத்வேகமும் நமது மிகப் பெரிய வலிமையாகும்.
தொழில்நுட்ப பயன்பாட்டில் கவனம் செலுத்தி, 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி அறிவியல், பாதுகாப்பு, வணிகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் திறன்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை நிலைநாட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நம்பிக்கையோடு நோக்குவது, நமது நாட்டின் வலிமையை பிரதிபலிக்கிறது.
ஜெயின் சா்வதேச வா்த்தக அமைப்பின் மூலம் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஜெயின் சமூகத்தினா் ஆற்றிவரும் பணிகள் பாராட்டுக்குரியவை.
முக்கியமாக, அந்நியப் பொருள்கள் மீதான சாா்புத்தன்மையைக் குறைத்து, உள்ளூா் பொருள்களை ஊக்குவிக்கும் பணியில் இந்த அமைப்பு குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது என்று தனது கடிதத்தில் பிரதமா் மோடி புகழாரம் சூட்டியுள்ளாா்.
ஜெயின் சா்வதேச வா்த்தக அமைப்பின் புத்தாக்க ஆதரவு நிதியம், சுமாா் 80 நிறுவனங்களில் ரூ.200 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளது. மேலும், 25-க்கும் மேற்பட்ட ஜெயின் சமூக தொழில்முனைவோருக்கு நிதி ரீதியில் ஆதரவளித்து வருகிறது.