பிகார் மாநிலத்தில் ஞாயிறன்று (ஜூலை 7) மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. இது கடந்த 18 நாள்களில் பிகாரில் இடிந்து விழுந்த 11-வது பாலம் என்று அறியப்படுகிறது.
பிகாரின் கிழக்கு சம்பரண் மாவட்டத்தின் லோகர்ஹாமா கிராமத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிறிய பாலம் கனமழை காரணமாக இடிந்து விழுந்துள்ளது. இது இந்த மாவட்டத்தில் இடிந்து விழும் 2-வது பாலமாகும்.
கடந்த ஜூன் 22 அன்று அம்வா கிராமத்தில் ரூ.1.69 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.
கனமழை காரணமாக பிகார் முழுக்க தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுவது குறித்து குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ரத்தோட், “நீதித்துறை ஆணைய விசாரணை மூலம் மட்டுமே மாநிலம் முழுவதும் இடிந்து விழுந்த பாலங்களின் ரகசியங்களை வெளிப்படுத்த முடியும். இது அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் மொத்த வீழ்ச்சி” என்றார்.
இதுதொடர்பாக மாநில முதல்வர் நிதிஷ் குமாருக்கு எழுதிய கடிதத்தில் மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ள பாலங்கள் இடிந்து விழுந்துள்ள விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சரண் மற்றும் சிவான் மாவட்டங்களில் மட்டும், ஒரு வாரத்தில் ஆறு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. கடந்த ஜூன் 18 முதல் மாநிலம் முழுவதும் மொத்தமாக 13 பாலங்கள் மற்றும் மதகுகள் இடிந்து விழுந்ததாக அவர் கூறினார்.
கடந்த 15 ஆண்டுகளில் கட்டப்பட்ட பாலங்கள் மற்றும் மதகுகளின் தரம் குறித்து சோதனை செய்வதன் அவசியத்தையும் ராஜேஷ் ரத்தோட் அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.