தவறிழைத்தவர்கள் கண்டறியப்படாவிட்டால் மறுதேர்வு: உச்ச நீதிமன்றம்
தவறிழைத்தவர்கள் கண்டறியப்படாவிட்டால் மறுதேர்வுக்கு உத்தரவிடப்படும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புது தில்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தவறிழைத்தவர்கள், பயடைந்தவர்கள் கண்டறியப்படாவிட்டால், மறுதேர்வுக்கு உத்தரவிடப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.
அப்போது, நீட் தேர்வு நடத்தும் முறைகள், வினாத்தாள் கசிவு நடந்தது எப்படி? எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியிருந்தது. அதற்கு தேசிய தேர்வு முகமை சார்பில் பல்வேறு பதில்கள் அளிக்கப்பட்டன.
இதையடுத்து, நீட் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதிலை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கும் சிபிஐக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு நடைபெறாமல் தடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், ஜூலை 10ஆம் தேதிக்குள் என்டிஏ மற்றும் சிபிஐ தரப்பில் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட அமர்வு, வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது.
நீட் முறைகேடு விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் பயடைந்தவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இல்லையேல் மறுதேர்வுக்கு உத்தரவிட நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
முன்னதாக, இந்த வழக்கு விசாரணை தொடங்கிய போது, மொத்த மதிப்பெண் எடுத்த மாணவர்களில் எத்தனை பேர் தவறான வினாத்தாள் வழங்கப்பட்ட மையங்களில் தேர்வெழுதினர் என உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, கருணை மதிப்பெண் பெற்ற 1563 மாணவர்களில், முழு மதிப்பெண் பெற்ற 6 பேர் மட்டுமே இருந்தனர் என்று என்டிஏ பதிலளித்துள்ளது.
மேலும், ஒட்டுமொத்த நீட் தேர்வு முடிவுகளையே ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும், நீட் தேர்வுக்கு ஜூன் 14ல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிக்கப்பட்டதற்கு 10 நாள்கள் முன்பாக தேர்வு முடிவுகள் வெளியானது
கடந்த 8 ஆண்டுகளில் இல்லாதபடி நீட் தேர்வில் முழு மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. அவை பிரிண்ட் எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
கடந்தாண்டு மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, நீட் தோ்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தோ்வு நடத்த வேண்டும், முறைகேடு தொடா்பாக நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்தச் சூழலில் நீட் முறைகேடுகள் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட 38 மனுக்கள் மீது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் அமா்வு திங்கள்கிழமை விசாரணை நடத்தி, என்டிஏ மற்றும் சிபிஐக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.