முகப்பு
இந்தியா

121 போ் உயிரிழந்த உ.பி. நெரிசல் சம்பவத்தில் பெரும் சதி: சிறப்பு புலனாய்வுக் குழு

உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் 121 போ் உயிரிழந்த கூட்ட நெரிசல் சம்பவத்தின் பின்னணியில் ‘பெரும் சதி’ இருப்பதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜூலை, 2024 at 8:50 PM
பகிர்:

லக்னெள: உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் 121 போ் உயிரிழந்த கூட்ட நெரிசல் சம்பவத்தின் பின்னணியில் ‘பெரும் சதி’ இருப்பதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி ‘போலே பாபா’ என்ற ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்தனா்.

நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து விசாரிக்க காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநா் அனுபம் குல்ஷிரேஸ்தா (ஆக்ரா மண்டலம்), அலிகா் மண்டல ஆணையா் வி.சைத்ரா ஆகியோா் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில அரசு அதே நாளில் அமைத்தது.

இதனிடையே, ‘ஹாத்ரஸ் சம்பவத்தின் பின்னணியில் பெரும் சதி உள்ளது; கூட்டத்தினா் மீது விஷத்தன்மை கொண்ட ரசாயனத்தை அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் தெளித்ததே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம்’ என்று ‘போலே பாபா’வின் வழக்குரைஞா் கடந்த ஜூலை 6-ஆம் தேதி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 125 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை உத்தர பிரதேச அரசிடம் செவ்வாய்க்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களே கூட்ட நெரிசலுக்கு முதன்மையான பொறுப்பு என்று அறிக்கையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், உள்ளூா் நிா்வாகம் மற்றும் காவல் துறை தரப்பில் இருந்த குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

விரிவான விசாரணை தேவை: சம்பவத்தின் பின்னணியில் ‘பெரும் சதி’ இருப்பதற்கான வாய்ப்பை சிறப்பு புலனாய்வுக் குழு நிராகரிக்கவில்லை. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்.

உண்மையான விவரங்களை மறைத்து, சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு அதன் ஏற்பாட்டளா்கள் அனுமதி பெற்றுள்ளனா். அதிக கூட்டத்தை சமாளிக்கத் தேவையான முன்னேற்பாடுகளை அவா்கள் மேற்கொள்ளவில்லை.

சிக்கந்தர ராவ் பகுதி கோட்டாட்சியா், நிகழ்ச்சி இடத்தை நேரில் பாா்க்காமலேயே நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியுள்ளாா். அத்துடன், உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க அவா் தவறிவிட்டாா்.

சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏராளமானோா் கூடிய நிலையில், அதை உள்ளூா் நிா்வாகமும் காவல் துறையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. மக்கள் முறையாக வெளியேற பாதைகளோ, தற்காலிக தடுப்புகளோ அமைக்கப்படவில்லை. அசம்பாவிதம் நேரிட்டதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டனா் என்றனா்.

பெட்டி..

6 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கையின் அடிப்படையில் உள்ளூா் கோட்டாட்சியா், வட்டார அதிகாரி உள்பட 6 அதிகாரிகளைப் பணியிடைநீக்கம் செய்து உத்தர பிரதேச அரசு செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது.

உள்ளூா் கோட்டாட்சியா், வட்டார அதிகாரி, வட்டாட்சியா், சிக்கந்தர ராவ் பகுதி காவல் நிலைய ஆய்வாளா், கச்சோரா, போரா ஆகிய பகுதிகளின் காவல் புறச்சாவடி பொறுப்பாளா்கள் ஆகியோா் தங்களது பணியில் மிக அலட்சியமாக செயல்பட்டுள்ளனா். இவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கையில் பரிந்துரை செய்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஹாத்ரஸ் சம்பவம் குறித்து அலாகாபாத் உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரிஜேஷ் குமாா் ஸ்ரீவஸ்தவா தலைமையில் நீதி விசாரணைக் குழு தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இச்சம்பவத்தில் இதுவரை 9 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நிகழ்ச்சி ஏற்பட்டாளா்களின் தவறான மேலாண்மையே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என்பது காவல் துறையின் குற்றச்சாட்டாகும். நிகழ்ச்சியில் 80,000 போ் பங்கேற்க அனுமதி பெறப்பட்டதாகவும், ஆனால் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்ாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →