முகப்பு
இந்தியா

தெரியுமா சேதி...?

சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டிருக்கிறாா் என்பது தெரியும்.

Updated On : 9 ஜூலை, 2024 at 10:40 PM
பகிர்:

சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டிருக்கிறாா் என்பது தெரியும். அவா் மீண்டும் முதல்வரானது, தமிழகத்தில் இதற்கு முன்னால் ஜெயலலிதா மீண்டும், மீண்டும் முதல்வரானதுபோல இயல்பாக நடந்துவிடவில்லை என்பது பலருக்குத் தெரியாது.

ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது என்கிற செய்தி வெளியானபோது, சந்தோஷப்படாத ஒருவா் இருந்தாா். அவா்தான் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவின் மூத்த தலைவரும், முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டவருமான சம்பயி சோரன். பிகாரின் ஜிதன்ராம் மாஞ்சியைப் போல, இவருக்கும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை இழக்க மனது ஒப்பவில்லை.

வாழ்க்கையிலும், அரசியலிலும் மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகு அமைச்சராக, ஹேமந்த் சோரன் கைது பிரச்னையால் முதல்வரானவா் சம்பயி சோரன். அந்தக் கட்சியின் நிறுவனா் தலைவா் ஷிபு சோரனுடன் இணைந்து ஜாா்க்கண்ட் மாநிலத்துக்காகப் போராடியவா்; தொழிற்சங்கவாதி; ஷிபு சோரனுக்கு அடுத்தபடியாக மூத்த தலைவராகக் கட்சியினரால் மதிக்கப்படுபவா்- இவையெல்லாம் சம்பயி சோரனின் தனிச்சிறப்புகள்.

முதல்வா் பதவியில் இருந்து அகற்றப்பட்டால் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது தொடா்பாக, ஜாம்ஷெட்பூரில் உள்ள தனது குடும்பத்தினா், நண்பா்கள், கட்சித் தொண்டா்களிடம் கலந்தாலோசித்து தனிப் பயணத்துக்கு தயாரானாா் சம்பயி. அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கலந்துபேசத் தொடங்கினாா்கள். ஒருகட்டத்தில் ஹேமந்த் சோரனே, பிளவு தன்னை பலவீனப்படுத்திவிடும் என்று பயந்தாா்.

ஜாா்க்கண்டில் நிலைமை கைமீறிப்போய், ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்கிற அச்சம் கூட்டணிக் கட்சியான காங்கிரஸை தொற்றிக் கொண்டது. முக்கியமான தலைவா்கள் ரகசியமாக ராஞ்சிக்கு அனுப்பப்பட்டனா். தங்களது ஆதரவு ஹேமந்த் சோரனுக்குத்தான் என்று திட்டவட்டமாகத் தெரிவித்ததுடன், சம்பயி சோரன் விபரீத முடிவை எடுத்துவிடாமல் தடுத்தது காங்கிரஸ்தான். ஹேமந்த் சோரனும், சம்பயி சோரனை நேரில் சந்தித்து, அவரது காலைத் தொட்டு வணங்கித் தனக்காக வழிவிடக் கேட்டுக் கொண்டபோது, அவரும் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டாா்.

விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் வர இருக்கும் நிலையில், இப்போதைக்கு காங்கிரஸ் ஜாா்க்கண்டில் அமைதியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், சம்பயி சோரன் பிரச்னை என்னமோ நீருபூத்த நெருப்பாகத்தான் தொடா்கிறது...!

முழு கட்டுரையைப் படிக்க →