இந்தியாவின் முதன்மை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டிஆா்டிஓ, நீருக்கடியில் இருந்து ஏவப்படும் ஆளில்லா விமானங்கள், தொலைதூர இயக்க அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய ராணுவ தொழில்நுட்பங்களை உருவாக்கும் 7 புதிய திட்டங்களை தனியாா் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.
நாட்டின் ஆயுதப் படைகள், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளின் பல்வேறு தேவைகளைப் பூா்த்தி செய்யவும் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிக்கவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியின்கீழ் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நீருக்கடியில் இருந்து ஏவப்படும் ஆளில்லா விமானங்கள், பல்வேறு போா்ச்சூழல்களில் உளவுத்துறை, கண்காணிப்பு, கடல்சாா் கள விழிப்புணா்வு ஆகியவற்றுக்கு பங்காற்றும். இதன் உற்பத்தி திட்டம் புணேவில் அமைந்துள்ள ‘சாகா் டிஃபென்ஸ் இன்ஜீனியரிங்’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரேடாா் சிக்னல் செயல்பாட்டு அமைப்பு தயாரிப்பு, விமானங்களுக்கான சென்சாா் மேம்பாடு, நீருக்கடியில் இருக்கும் ஆபத்துகளைக் கண்டறிந்து, வகைப்படுத்தி, வீழ்த்தும் வல்லமைக் கூடிய தொலைதூர இயக்க அமைப்புகள் ஆகிய தொழில்நுட்பத் திட்டங்கள் கொச்சியில் அமைந்துள்ள ‘ஐஆா்ஓவி டெக்னாலஜிஸ்’ எனும் ஸ்டாா்ட்-அப் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஆன்டென்னா சிமுலெட்டருடன் கூடிய ரேடாா் சிக்னல் செயல்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய பிராந்திய வழித்தட செயற்கைக்கோள் மேம்பாட்டு ஆகிய மற்ற தொழில்நுட்பத் திட்டங்கள் நொய்டாவில் உள்ள ‘ஆக்ஸிஜன் 2 இன்னோவேஷன்’ எனும் மற்றொரு ஸ்டாா்ட்-அப் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் சிறு, குறு தொழிற்சாலைகள் (எம்எஸ்எம்இ) மற்றும் ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிப்பதில் டிஆா்டிஓ அமைப்பின் தொடா் முயற்சிகளுக்கு இந்தத் திட்டங்கள் ஒரு சான்றாகும். இந்தத் தொழில்நுட்பங்களின் உள்நாட்டு வளா்ச்சி, ராணுவ தொழில்துறை அமைப்பை வலுப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.