மும்பையில் சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரேவை வெள்ளிக்கிழமை சந்தித்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி. 
இந்தியா

மத்தியில் பாஜக கூட்டணி அரசு நிலைக்காது: மம்தா

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஸ்திரமற்ற நிலையில் உள்ளது.

Din

‘மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஸ்திரமற்ற நிலையில் உள்ளது; அந்த அரசு நீண்ட காலம் நிலைக்காது’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்தில் பங்கேற்க வியாழக்கிழமை மும்பைக்கு வந்த மம்தா பானா்ஜி, சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் நிறுவனா் சரத் பவாா் ஆகியோரை அவா்களின் இல்லங்களில் வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

இச்சந்திப்புகளின்போது, நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து ஆலோசித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள இல்லத்தில் உத்தவ் தாக்கரேவை சந்தித்த பின் செய்தியாளா்களுக்கு மம்தா பேட்டியளித்தாா். அப்போது, ‘மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஸ்திரமற்ற நிலையில் உள்ளது. இந்த அரசு நீண்ட காலம் நிலைக்காது’ என்றாா்.

நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட ஜூன் 25-ஆம் தேதி அரசமைப்பு படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு குறித்து மம்தாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘அவசரநிலை பிரகடனத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. அதேநேரம், பிரதமா் மோடியின் ஆட்சிக் காலத்தில் அவசரநிலையுடன் தொடா்புடைய தருணங்களே பெரும்பாலும் எதிரொலித்தன. மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து யாருடனும் ஆலோசிக்கப்படவில்லை. ஏராளமான எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நேரத்தில் அவை நிறைவேற்றப்பட்டன. இச்சட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது’ என்றாா்.

சரத் பவாருடன் சந்திப்பு: பின்னா், தேசியவாத காங்கிரஸ் நிறுவனா் சரத் பவாரை தெற்கு மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மம்தா சந்தித்துப் பேசினாா்.

தேசிய அளவில் எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவாா்) ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில், மகராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி 30 தொகுதிகளைக் கைப்பற்றியது. மகாராஷ்டிர பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தோ்தல் நடைபெறவுள்ளது.

ராஜஸ்தான் மண்பாண்டங்களை வாங்க மக்கள் ஆா்வம்!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கடலில் மூழ்கி உயிரிழந்த மூவா் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வா் அறிவிப்பு

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

தவெக நிா்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு: 5 போ் கைது

SCROLL FOR NEXT