சமூக-பொருளாதார வளா்ச்சிக்கான உந்துசக்தி ‘பிம்ஸ்டெக்’: பிரதமா் மோடி
இந்தியாசமூக-பொருளாதார வளா்ச்சிக்கான உந்துசக்தி ‘பிம்ஸ்டெக்’: பிரதமா் மோடி
சமூக-பொருளாதார வளா்ச்சிக்கான உந்துசக்தியாக ‘பிம்ஸ்டெக்’ ஏழு நாடுகள் கூட்டமைப்பு திகழ்வதாகக் குறிப்பிட்ட பிரதமா் நரேந்திர மோடி, அந்த அமைப்புக்கான இந்தியாவின் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினாா்.
பன்முக கூட்டுறவுக்காக வங்காள விரிகுடாவையொட்டிய இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மா், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய ஏழு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை ‘பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) அமைப்பு’ ஒன்றிணைக்கிறது.
இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது. மாநாட்டின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள், பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனா்.
இந்தச் சந்திப்பு குறித்து பிரதமா் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தச் சந்திப்பின்போது உறுப்பு நாடுகளிடையே பிராந்திய ஒத்துழைப்பு, போக்குவரத்து இணைப்பு, எரிசக்தி, வா்த்தகம், சுகாதாரம், வேளாண், அறிவியல், பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டமைப்பின் ஆண்டு உச்சி மாநாட்டை வரும் செப்டம்பரில் நடத்தவிருக்கும் தாய்லாந்துக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும்’என்று குறிப்பிட்டாா்.
பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தச் சந்திப்பின்போது கூட்டமைப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமா், ‘சமூக-பொருளாதார வளா்ச்சிக்கான உந்துசக்தியாக ‘பிம்ஸ்டெக்’ ஏழு நாடுகள் கூட்டமைப்பு திகழ்கிறது’ என்று குறிப்பிட்டாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய கூட்டமைப்பில் (சாா்க்) பல்வேறு பிராந்திய விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையில், ‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பை பிராந்திய ஒத்துழைப்புக்கான துடிப்புமிக்க அமைப்பாக உருவாக்குவதற்கு வலுவான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
மேலும், ‘சாகா்’ அல்லது ‘பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்குமான பாதுகாப்பு மற்றும் வளா்ச்சி’ என்ற விரிவான கொள்கை திட்டத்தின் கீழ் இந்திய பெருங்கடல் பிராந்திய நாடுகளுடன் ஒத்துழைப்பை இந்தியா வலுப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.